உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு

தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு

2023ம் வருடத்தில் வெளியான படங்களுக்கான 71வது தேசிய விருதுகள் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி கையால் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2024ல் வெளியான படங்கள் 72வது தேசிய விருதுகளில் கலந்து கொள்வதற்காக தேதி அறிவிக்கப்பட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அதன் காலக்கெடு முடிவடைந்தது.

இந்த நிலையில் கடந்த வருடம் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், ஜோதிர்மயி நடிப்பில் வெளியான போகன் வில்லா என்கிற திரைப்படத்தை 72வது தேசிய விருது போட்டியில் கலந்து கொள்ளும் விதமாக ஆன்லைன் மூலமாக அனுப்ப முயற்சித்ததாகவும் ஏழு படி நிலைகளில் படிவத்தை பூர்த்தி செய்து எட்டாவதாக பணம் கட்டும்போது தேசிய விருதுகளுக்கான ஆன்லைன் தளம் முடங்கிப் போய் பணம் கட்ட முடியாமல் போனது என்றும் ஆதலால் தங்களுடைய தேசிய விருதுகளுக்கான போட்டியில் இடம்பெற முடியாமல் போனதும் என்றும் கூறி படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது தேசிய விருது இணையதளத்தில் ஏற்பட்ட குளறுபடியால் நிகழ்ந்த பாதிப்பு என்பதால் தங்கள் படத்தை மீண்டும் அனுப்புவதற்கான வாய்ப்பை தர வேண்டும் என்றும் ஏற்கனவே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருதுகளில் எங்கள் படம் ஏழு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது என்றும் நிச்சயம் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற தகுதி உள்ள படம் என்றும் அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேசமயம் இந்த மனு குறித்த விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது, அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் தேசிய விருதுக்கு படங்களை அனுப்புவது குறித்த அறிவிப்பு பல்வேறு தளங்களில் 20 நாட்களுக்கு முன்பே விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது என்றும் கடைசி நாளில் கடைசி நேரத்தில் போகன் வில்லா படக்குழுவினர் தங்கள் படத்திற்கான விண்ணப்பத்தை அனுப்பும்போது இது நிகழ்ந்துள்ளது என்றும் வாதிட்டார். ஆனாலும் நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை செயலாளருக்கு அனுப்பி வைத்து அவர்களது மனுவை பரிசீலனை செய்து முடிவை அறிவிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !