உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா

பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா


நடிகர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மையோடு, 1940களில் தமிழ் திரையுலகில் ஒரு தலை சிறந்த சூப்பர் ஸ்டாராக கலையுலகை அலங்கரித்து, காண்போரை தனது வசீகர நடிப்பாலும், கம்பீரக் குரலாலும் தன்வயப்படுத்தியவர்தான் புதுக்கோட்டை உலகநாதன் சின்னச்சாமி பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் பி யூ சின்னப்பா. 1936ம் ஆண்டு 'ஜுபிடர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளிவந்த “சந்திரகாந்தா” என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஒரு நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து “அனாதைப் பெண்”, “மாத்ரு பூமி” ஆகிய படங்களில் இரண்டாவது நாயகனாகவும், “யயாதி” திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்திருந்த பி யூ சின்னப்பாவிற்குள்ளும் ஒரு மனக்குறை இருந்து வந்தது.

நன்றாகவே நடித்திருந்தும், பார்த்தவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தும், தனக்கு இன்னும் நல்ல மாதிரியான கதாபாத்திரத்தோடு, தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் பி யூ சின்னப்பாவிடம் இருந்து வந்தது. இந்த சினிமா உலகை வென்று காட்ட அப்போது அவர் ஒரு புதுவிதமான போராட்டம் ஒன்றை தனது வீட்டிற்குள்ளேயே தொடங்கினார். 'ஆத்மசக்தி மூலம் இந்த சினிமா உலகை என் பக்கம் திருப்புகிறேன்' என்று சொல்லி, உண்ணாவிரதமும், மவுனவிரதமும் கடைபிடிக்க தொடங்கினார் பி யூ சின்னப்பா.

ஆச்சர்யமான ஒரு உண்மை என்னவென்றால், இவர் உண்ணாவிரதமும், மவுனவிரதமும் இருக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே சேலம் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபரும், இயக்குநருமான டி ஆர் சுந்தரம், பி யூ சின்னப்பாவின் வீட்டைத் தேடி, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கே வந்து பேசி, எழுத்து மூலம் இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அப்படி இந்த கூட்டணியில் உருவான திரைப்படம்தான் 1940ல் வெளிவந்த “உத்தமபுத்திரன்” என்ற திரைப்படம். பி யூ சின்னப்பா அண்ணன் மற்றும் தம்பி என இரட்டை வேடமேற்று நடித்திருந்தார். இரட்டை வேட திரைப்படங்களில் மிகச் சிறந்த நடிப்பும், அற்புதமான படப்பிடிப்பும் அமைந்த முதல் தமிழ் திரைப்படமாக வந்ததுதான் இந்த “உத்தமபுத்திரன்”. படத்தில் இரண்டு சின்னப்பாக்களும் மோதிக் கொள்ளும் காட்சியை அதுவரை தமிழ் திரை ரசிகர்கள் கண்டிராத வகையில் படம் பிடித்திருந்தார் படத்தின் ஒளிப்பதிவாளர் டபுள்யு ஆர் சுப்பாராவ்.

ஏம் வி ராஜம்மா, டி எஸ் பாலையா, காளி என் ரத்தினம், என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம், பி யூ சின்னப்பாவின் திரைப்பயணத்தில் ஒரு மாபெரும் திருப்பத்தைத் தந்து. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து “ஆர்யமாலா”, “கண்ணகி”, “மனோன்மணி”, “ஜகதலப்பிரதாபன்”, “மங்கையர்க்கரசி” என பி யூ சின்னப்பாவின் வெற்றித் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவரது புகழ் ஓங்கி ஒலித்து, ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்து, கலையுலகின் உச்சம் தொட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !