பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம்
மலையாள இயக்குனர் பாசிலின் முக்கியமான படம் 'பூவினும் புதிய பூந்தென்றல்'. இந்தப் படத்தில் மம்முட்டி நதியா, சுரேஷ் கோபி, குழந்தை நட்சத்திரம் சுஜிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வில்லன்கள் கொலை செய்வதை ஒரு பேச்சு மற்றும் கேட்கும் குறைபாடு உள்ள சிறுமி பார்த்து விடுவாள். அந்த சிறுமியை வில்லன்கள் துரத்தும்போது, அவள் குடும்ப சூழ்நிலைகளால் குடிகாரனான ஒரு நல்ல மனிதனிடம் அடைக்கலம் தேடிக் கொள்வாள். வாய் பேச முடியாத குழந்தையின் அசைவைக் கொண்டு குற்றவாளிகளை அந்த குடிகாரர் கண்டுபிடித்து தண்டிப்பது தான் படத்தின் கதை.
இந்தப் படம் மலையாளத்தில் தோல்வியடைந்தது. இந்தப் படம் வெளியான நேரத்தில் ஏராளமான மம்முட்டி நடித்த படங்கள் வெளியானதும் கிளைமாக்சில் மம்முட்டி இறப்பது போன்று காட்டப்பட்டதும்தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது.
தனக்குப் பிடித்த இப்படியான ஒரு படம் தோல்வி அடைந்தது பாசிலை மிகவும் பாதித்தது. அதனால் அதனை தமிழில் இன்னும் சிறப்பாக ரீமேக் செய்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். இதற்காக அவர் முதலில் நம்பியது இளையராஜாவவை. அவரின் அற்புதமான பாடல்கள் நேர்த்தியான பின்னணி இசை ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்தது. பாசில் தமிழுக்காக கதையை ரிச்சாக காட்சிப்படுத்தி இருந்தார். சத்யராஜ் ஷாட்டுக்கு ஒரு சட்டை என விதவிதமாக அணிந்து, நெற்றியை மறைக்கும் விக் அணிந்து படு ஸ்டைலாக மாற்றி இருந்தார்.
நதியாவுக்கு பதிலாக நடித்த கார்த்திகாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அடுத்து நடந்த பெரிய மாற்றம் ரகுவரன். ஆனந்த் என்கிற பணக்கார கணவனாக ரகுவரன் அட்டகாசமாக பொருந்தி இருந்தார். மலையாளத்தில் சுரேஷ்கோபி பெரிதாக ஈர்க்கப்படவில்லை என்பதால் கோட், சூட் போட்டு படு ரிச்சான வில்லனாக ரகுவரனை மாற்றினார். அவர் மனைவி அவரை வெறுக்க ஒரு காரணமாக ரகுவரன் ஒரு ஊனமுற்ற கேரக்டராக மாற்றினார்.
இத்தகைய மாற்றங்களால் தமிழில் 'பூவிழி வாசலிலே' படம் பெரும் வெற்றி பெற்றது. 13 தியேட்டர்களில் 150 நாள் ஓடியது. மூன்று தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியது.