'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல்
தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ க்ரீன். அந்நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள 'வா வாத்தியார்' படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அப்படத்தை இன்று டிசம்பர் 5ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து, தள்ளி வைத்தார்கள்.
அந்த தள்ளி வைப்புக்குக் காரணம் நீதிமன்ற உத்தரவு. 2014ம் ஆண்டில் பைனான்சியர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பரை திவாலானவர் என அறிவித்து அவரது சொத்துக்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் சொத்தாட்சியர் நியமிக்கப்பட்டார். அவரிடமிருந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கடனாகப் பெற்ற 10 கோடியே 35 லட்ச ரூபாய் வட்டியுடன் சேர்ந்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
கடந்த வருடம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வெளிவந்த 'தங்கலான், கங்குவா' ஆகிய பட வெளியீட்டின் போதும் அந்த பாக்கி கடன் தொகை வழக்கால் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் நீதிமன்ற உத்தரவுப்படி கொஞ்சம் பணம் செலுத்தி படத்தை வெளியிட்டார்கள்.
தற்போது 'வா வாத்தியார்' படம் வெளியாகும் அறிவிப்பு வந்ததால், சொத்தாட்சியர் சார்பில் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடன் தொகையைத் தர வேண்டும் அதுவரை படத்திற்குத் தடை விதிக்க வேண்டும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை போட்டு வழக்கை டிசம்பர் 8க்கு தள்ளி வைத்துள்ளது.
இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாக்கி கடன் தொகையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்துமா, அல்லது நீதிமன்றத்தில் வேறு ஏதேனும் முறையிட்டு படத்தை வெளியிட உள்ள தடையை நீக்க முயற்சிப்பார்களா என்பது தெரிய வரும்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. படம் முடிந்து சில மாதங்களாகியும் வெளியாகமல் உள்ளது. வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு சிக்கல்களைத் தீர்த்து விட்டு வெளியீட்டை அறிவிக்காத படங்களால் வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கடும் சிக்கல்களை எதிர்கொள்வதாக கோலிவுட்டில் புலம்புகிறார்கள்.