இன்று ‛சேது' படத்துக்கு வயது 26
பாலா இயக்கத்தில் விக்ரம், சிவகுமார், அபிதா, ஸ்ரீமன் நடித்த ‛சேது' படம், இதே நாளில்தான்(டிசம்பர் 10) 1999ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்தவகையில் ‛சேது' படத்துக்கு இன்று வயது 26. தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இன்றும் பேசப்படும் சேது, சினிமாவில் பல ஆண்டுகளாக போராடி வந்த விக்ரமுக்கு ஸ்டார் அந்தஸ்தை கொடுத்தது. பாலாவை பேசப்படும் இயக்குனர் ஆக்கியது. அடுத்து இவர்கள் இணைந்து ‛பிதாமகன்' என்ற படத்தை கொடுத்தனர். ஆனால், இப்போது பேச்சுவார்த்தை இல்லாத அளவுக்கு இருவரும் பிரிந்து விட்டார்கள் என தகவல்.
விக்ரம் தனது மகன் துருவ்வை, தனக்கு வாழ்வு கொடுத்த பாலா மூலமாக அறிமுகப்படுத்த நினைத்தார். அந்த நட்பின் அடிப்படைபில் ‛வர்மா' படம் உருவானது. ஆனால், விக்ரமுக்கு அந்த படம் பிடிக்கவில்லை. படத்தை ரிலீஸ் பண்ண வேண்டாம். தனது மகன் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நினைத்தார். அந்த பிரச்னையில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு, அது இன்றும் தொடர்கிறது. பாலாவும் இதுவரை விக்ரம் குறித்து, வர்மா பட பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக அதிகம் பேசவில்லை. விக்ரமும் அந்த விவகாரத்தை பெரிதாக்கவில்லை.
அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர எதிரிகள், நண்பர்கள் இல்லை என்பதை விக்ரம், பாலா நட்பும் உணர்த்தியுள்ளது. சேது படம் தெலுங்கில் ரீமேக் ஆனது, ராஜசேகர் நடித்தார். கன்னட ரீமேக்கில் கிச்சா சுதீப் நடித்தார். ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. இப்போது தமிழில் சேது படத்தை ரீ ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.