கைகூப்பி கேட்கிறேன்... ஆதரிக்காதீங்க : ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார் ஸ்ரீலீலா. அடுத்து தமிழில் ‛பராசக்தி' படம் மூலம் கால் பதிக்கிறார். இதுதவிர ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஏஐ தொழில்நுட்பத்தால் நடிகைகள் பலரும் தவறாக சித்தரிக்கப்படுகின்றனர். அதில் நடிகை ஸ்ரீலீலாவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான விஷயங்கள் அவரின் கவனத்திற்கு வந்ததையடுத்து ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக ஸ்ரீலீலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : ‛‛வலைதள பயன்பாட்டாளர்கள் ஒவ்வொருவரையும் கைகூப்பி கேட்கிறேன். ஏஐ.,யால் உருவாக்கப்பட்ட அப்பத்தமான விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த கூடாது. தொழில்நுட்ப வளர்ச்சி வாழ்க்கையை எளிமையாக்க வேண்டுமே தவிர சிக்கலாக்க கூடாது.
வேலை காரணமாக ஆன்லைனில் நடக்கும் பல விஷயங்களை நான் அறியாமல் இருந்தேன். அதை என் கவனத்திற்கு கொண்டு வந்த நலம் விரும்பிகளுக்கு நன்றி. இது தொந்தரவு செய்யக் கூடியதாகவும், பேரழிவு தரக் கூடியதாகவும் உள்ளது. என் சக ஊழியர்கள் அனைவருக்காகவும் குரல் கொடுக்கிறேன். கண்ணியத்துடனும், மரியாதையுடனும், என் பார்வையாளர்கள் மீது நம்பிக்கையுடன் தயவுசெய்து எங்களுக்கு ஆதரவாக நில்லுங்கள் '' என்கிறார்.