ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம்
இயக்குனராக இருந்த ரவி மரியா ஒரு கட்டத்தில் வில்லன் நடிகர் ஆனார். பின்னர் காமெடியனாக மாறி இப்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்த கட்டமாக கதை நாயகனாக மாறுகிறார்.
ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் ராதா ரவி - ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த படம் 2026ம் ஆண்டு வெளியாகிறது.
'பழகிய நாட்கள்', 'மூன்றாம் மனிதன்' ஆகிய திரைப்படங்களை தயாரித்து, இயக்கிய இயக்குனர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு ,நிழல்கள் ரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார். அரசியலும், நகைச்சுவையும் கலந்து தயாராகும் இந்த படத்தில் ரவி மரியாவும் இணைந்து அரசியல் செய்வதாக கதை நகர்கிறதாம்.
சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மையப்படுத்தியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ரவி மரியாவுக்கு கதாநாயகி தேடுதல் படலம் இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல உலக அளவில் கதாநாயகி தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார் இயக்குனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.