உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம்

பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம்

பொங்கல் நெருங்குவதை தொடர்ந்து அது தொடர்பான ஜல்லிக்கட்டு விழாக்களும் தொடங்கி உள்ளது. சமீபகாலமாக ஜல்லிக்கட்டை படத்தில் ஒரு பகுதியாக கொண்ட படங்கள் ஏராளமான வந்துள்ளது. விருமாண்டி, மெர்சல், கருப்பன், அன்பறிவ், பேட்டைகாளி போன்றவை அவற்றில் முக்கியமான படங்கள்.

ஆனால் முதல் ஜல்லிக்கட்டு சினிமா எது தெரியுமா? அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 'தாய்க்கு பின் தாரம்'. ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த சதியின் காரணமாக எம்ஜிஆரின் தந்தை இறந்து விட தந்தை இழந்த வெற்றியை மகன் பெறுவதுதான் படத்தின் கதை. 1956ம் ஆண்டு வெளிவந்தது.

எம்.ஏ. திருமுகம் இயக்கிய இந்த படத்தில் பானுமதி டி.எஸ். பாலையா, ராதாகிருஷ்ணன், கண்ணாம்பா, சகுந்தலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசை அமைத்து இருந்தார் கே.வி. மஹாதேவன். ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் தனது தேவர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம். படம் பெரிய வெற்றி பெற்றதால் படத்தில் எம்ஜிஆருடன் நடித்த ஜல்லிக்கட்டு காளையை தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவாக வைத்துக்கொண்டார் தேவர்.

இப்படத்தில் முத்தையன் என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். அவரின் தாயாக கண்ணாம்பா நடித்தார். மேலும் பாலையா, பானுமதி உள்ளிட்டோர் நடித்தனர். படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு காட்சிகளும், சிலம்ப காட்சிகளும் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது .

மாயாண்டி எனும் அடியாள் கதாபாத்திரத்தில் தேவரும் நடித்திருந்தார். தேவரும் எம்.ஜி.ஆரும் சிலம்ப சண்டை போடும் காட்சிகளை மிகவும் ரசித்தார்கள் ரசிகர்கள். அதே போல எம்.ஜி.ஆர் காளையை அடக்கும் காட்சியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !