உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த டி.எஸ்.பாலய்யா

பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த டி.எஸ்.பாலய்யா

வில்லன், குணச்சித்ரம், காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் டி.எஸ். பாலையா. சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். ஆனால் அவர் எம்ஜிஆர், சிவாஜி போன்று ஆக் ஷன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒன்று. அந்தப் படம் 'வெறும் பேச்சு அல்ல'. 1956 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஜோசப் பலியட் என்பவர் இயக்கி, தயாரித்தார். சி என் பாண்டுரங்கன் இசையமைத்தார்.

ஒரு அழகான பெண்ணை ஏமாற்றி அவளை கர்ப்பம் ஆக்கி நடுக்காட்டில் விட்டு விட்டு செல்கிறான் வில்லன். ஒரு மகனை பெற்றெடுத்து அவன் மூலம் உன்னை பழிவாங்குவேன் என சவால் விடும் தாய் இறந்து விடுகிறாள். காட்டுக்குள் புலி சிங்கங்களுடன் வளரும் மகன் வளர்ந்து ஆளாகி வில்லனை பழி வாங்குவது படத்தின் கதை.

தாயாக ராகினி நடித்தார். அவரது மகனாக டி.எஸ். பாலையா நடித்தார். வில்லனின் வளர்ப்பு மகளாக பத்மினி நடித்தார். தாயின் சபதப்படி வில்லனை பழிவாங்குவதற்காக அவனது மகளை கடத்தி வைத்துக் கொண்டு அதன் மூலம் மிரட்டி பழிவாங்குகிற மாதிரியான திரைக்கதை.

இதில் டி.எஸ். பாலையா ஆக் ஷன் ஹீரோவாக நடித்தார். படம் முழுக்க மாடர்ன் உடைகள், தலையில் கவுபாய் தொப்பி அணிந்து நடித்தார். ஏராளமான சண்டை காட்சிகளும் படத்தில் இடம்பெற்றது அதில் மிகவும் சிரமப்பட்டு பாலையா நடித்திருந்தார்.

டி.எஸ். பாலையாவை காமெடி நடிகராகவே பார்த்து வந்த ரசிகர்களால் அவரை ஆக் ஷன் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் சீரியஸாக நடித்த காட்சிகளில் ரசிகர்கள் சிரித்தனர். இந்தப் படத்தில் முதன்முறையாக பத்மினியின் கவர்ச்சி நடனம் ஒன்று இடம்பெற்றது. படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !