'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு
கடந்த 2016ம் ஆண்டில் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் 'தெறி'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் விஜய், அட்லி கூட்டணி முதல்முறையாக அமைந்தது. அதன் பிறகு, 'மெர்சல், பிகில்' என வரிசையாக இந்த கூட்டணி ஹிட் கொடுத்தது.
தெறி படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களைக் கடந்த நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய இதன் தயாரிப்பாளர் எஸ் தாணு திட்டமிட்டிருந்தார். விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் தள்ளிப்போனது. இதனையடுத்து, தெறி படத்தை பொங்கல் அன்று ஜன.,15ல் ரீ ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில், திடீரென தெறி ரீ ரிலீசையும் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளனர். தாணு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'வரவிருக்கும் புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் தெறி ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.