வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம்
மலையாள இயக்குனரான நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தின் முடிவில், “படிச்சி படிச்சி சொன்னேனடா கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடா, பண்ணுங்கடான்னு கேட்டீங்களா,” என்ற ஒரு வசனம் வருகிறது. அந்த வசனம் மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த படத்தின் டீசரிலும் இடம் பெற்றிருக்கிறது.
கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்தனர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது அவர் அழுது கொண்டே பேசியவையதான், “படிச்சு படிச்சு சொன்னாங்க, கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடா, பாலோ பண்ணுங்கடான்னு,”.
நிஜத்தில் சோகத்தில் அவர் பேசிய வார்த்தைகளை, 'தலைவர் தம்பி தலைமையில்' காமெடிக்காகப் பயன்படுத்தியுள்ளார். படத்தின் புரமோஷனுக்காக தியேட்டர் தியேட்டராகச் செல்லும் ஜீவா தியேட்டர்களில் ரசிகர்கள் முன்னிலையில் இந்த வார்த்தைகளை காமெடியாகப் பேசி வருகிறார். அதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜீவாவை எக்ஸ் தளத்தில் பலரும் 'டேக்' செய்து இது குறித்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜீவா, “டிரெண்டிங்கிற ஒரு விஷயத்தை வச்சிதான் இப்ப எல்லாத்தையும் பண்ணிக்கிட்டிருக்கோம். அது டைரக்டர் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி இது. அவர்தான் இந்த நேரத்துல இப்படி ஒரு டயலாக் போட்டால் நல்லா இருக்கும்னு சொன்னாரு. நானும் கொஞ்சம் வெகுளியா அதைப் பேசிட்டேன். மக்கள் மத்தியிலும் அதுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. மத்தபடி யாரையும் 'ஹர்ட்' பண்றதுக்கோ, புண்படுத்தறதுக்கோ இல்ல. பியூர் என்டர்டெயின்மென்ட்தான்,” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுவும் தற்போது சர்ச்சையை தொடர வைத்துள்ளது. '41 பேர் மரணத்தின் வருத்தத்தில் வந்த வார்த்தைகளை சினிமாவில் காமெடியாகப் பயன்படுத்தியதோடு, அதை தற்போது பியூர் என்டர்டெயின்மென்ட்,' என சொல்வதா என்றும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.