மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி
தமிழ் சினிமாவில் இருக்கும் பெண் இயக்குனர்களில் முன்னணியில் இருக்கும் ஒரே இயக்குனர் சுதா கொங்கரா. அவரது இயக்கத்தில் வந்த 'இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' ஆகிய படங்கள் அவருக்கு பெரிய பெயரைத் தேடித் தந்தன. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளிவந்த 'பராசக்தி' படம் அமைந்தாலும் அது விமர்சனங்களையும் சேர்த்து ஏற்படுத்தியது.
'பராசக்தி' படத்தை இதற்கு முன்பு சூர்யா நடிக்க 'புறநானூறு' என்ற பெயரில் சுதா இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென அந்தப் படத்தை கைவிட்டனர். அதன் பிறகு அந்தப் படத்தில் நடிக்க வேறு சில ஹீரோக்களை அணுகி கடைசியாக சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்து படத்தை முடித்து வெளியிட்டார்கள்.
சூர்யாவுக்கும், சுதாவுக்கும் 'புறநானூறு' கதை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டை போட்டு பிரிந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சுமூகமாக பேசித்தான் அந்தப் படத்தை கைவிட்டார்களாம்.
சுதா கொங்கரா அடுத்து இயக்க உள்ள படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா தற்போது அவரது 46, 47வது படங்களில் நடித்து வருகிறார். அதற்கடுத்து அவரது 48வது படமாக சுதா இயக்கும் படம் உருவாகலாம். இருந்தாலும் 48வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருவரில் யாருடைய படம் 48 மற்றும் 49 என்பது விரைவில் தெரிய வரலாம்.