'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு திரவுபதி படத்தை இயக்கிய மோகன் ஜி தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதனை சோழ சக்கரவர்த்தி என்பவர் தயாரித்துள்ளார். இது ஒரு சரித்திர கதை படமாகும்.
நாளை படம் வெளிவர உள்ள நிலையில் படத்துக்கு எதிராக மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மகாமுனி, என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள வழக்கு மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :
திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்ற அடிப்படையில் திரவுபதி - 2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அந்த மன்னரை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக படத்தின் இயக்குநர் மோகன் ஜி சித்தரித்துள்ளார். திரைப்படத்தின் சுவரொட்டிகளில் மன்னரின் பெயர் மாற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது.
இதை கண்டித்து மேலூரில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த படத்துக்கு அவசர, அவசரமாக யூஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது. யூஏ சான்றிதழை திரும்ப பெறுமாறு தணிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரவுபதி 2 படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்யவும், படத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளை திருத்தம் செய்யும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தணிக்கை வாரியம் படத்திற்கு சான்றிதழ் தந்து விட்டது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.