32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி
மலையாள திரையுலகில் பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் பல டாக்குமென்டரி படங்களையும் அதன் பிறகு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். குறிப்பாக 1987ல் மம்முட்டியை ஹீரோவாக வைத்து ஆனந்தராம் என்கிற படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து மதிலுகள் மற்றும் விதேயம் என மம்முட்டியை வைத்தே தொடர்ந்து படங்களை இயக்கினார். இதில் மதிலுகள் திரைப்படம் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதையும், சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதேபோல விதேயம் படமும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்று தந்தது.
இப்படி பலமுறை தேசிய விருதுகளை பெற்ற அடூர் கோபாலகிருஷ்ணன் கடைசியாக 2016ல் திலீப், காவ்யா மாதவன் இணைந்து நடித்த பின்னேயும் என்கிற படத்தை இயக்கினார். அதன்பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனராக தற்போது களம் இறங்குகிறார். இந்த முறை மம்முட்டியை வைத்து அவர் படம் இயக்குகிறார். 32 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணையும் இந்த படத்திற்கு படயாத்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தான் இந்த படத்தை தயாரிக்கிறது.