உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உரிமையாளர் பார்த்திபனுக்கே 'க்ளைம்' கேட்கும் படங்கள்

உரிமையாளர் பார்த்திபனுக்கே 'க்ளைம்' கேட்கும் படங்கள்

தமிழ்த் திரையுலகத்தில் இயக்கம், நடிப்பு என அறிமுகமானவர்களில் பார்த்திபன் முக்கியமானவர். பாக்யராஜின் உதவியாளராக இருந்து 1989ல் வெளியான 'புதிய பாதை' படத்தின் மூலம் இயக்குனர், நடிகர் என அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றியையும் பதிவு செய்தார். அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது, மனோரமாவிற்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது என இரண்டு விருதுகளைப் பெற்றது.

1999ல் அவர் இயக்கி நடித்த 'ஹவுஸ்புல்' படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது, அடுத்து 2019ல் வெளியான 'ஒத்த செருப்பு' படம் சிறப்பு ஜுரி, தேசிய விருது ஆகியவற்றையும் வென்றது. தொடர்ந்து பல வித்தியாசமான, மாறுபட்ட கதைகளை இயக்கியும் நடித்தும் வருபவர் பார்த்திபன்.

சில தினங்களுக்கு முன்பு அவருடைய சில படங்களுக்கான உரிமை குறித்த பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். “புதிய பாதை, பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநீ, புள்ளகுட்டிக்காரன், அபிமன்யு, ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை, பச்சக் குதிர, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு சைஸ் 7, டீன்ஸ்,” ஆகிய படங்களின் அனைத்து பதிப்புரிமைகள், அறிவுசார் சொத்துரிமைகள், நெகட்டிவ் உரிமைகள், வழித்தோன்றல் உரிமைகள், மற்றும் பன்னாட்டு உரிமைகள் ஆகியவற்றுக்குத் தனிப்பட்ட முழுமையான மற்றும் பிரத்யேக உரிமையாளர் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. யாரும் அனுமதியின்றி அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்கள். யாரேனும் உரிமை, பாத்தியதை வைத்திருந்தால் ஆதார ஆவணங்களுடன் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பார்த்திபன் அவருடைய ராதாகிருஷ்ணன் பார்த்திபன் யு டியூப் சேனல்களில் அவருடைய படங்களைப் பதிவேற்றம் செய்யத்தான் இந்த அறிவிப்பு என்பது தெரிய வருகிறது. அவருடைய யு டியூப் னேசலில் 'குடைக்குள் மழை' படத்தைப் பதிவேற்றம் செய்தால் தனக்கே 'கிளைம்' வருகிறது என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது சில நாட்களுக்கு முன்பு 'குடைக்குள் மழை' படத்தைப் பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு முன்பு 'கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு சைஸ் 7' உள்ளிட்ட படங்களையும் அவரது யு டியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இனி, அடுத்தடுத்து மற்ற படங்களையும் வெளியிட உள்ளார் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !