உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் தமன்னா

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் தமன்னா

தமிழ் சினிமாவில் இருக்கும் சீனியர் கதாநாயகிகளில் 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர்களாக த்ரிஷா, நயன்தாரா, தமன்னா என ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.

த்ரிஷா தற்போது 'கருப்பு' தமிழ்ப் படத்திலும், 'விஷ்வம்பரா' தெலுங்குப் படத்திலும், 'ராம்' மலையாளப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன. நயன்தாரா தற்போது, தமிழில் 'மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி' ஆகிய படங்களிலும், கன்னடத்தில் 'டாக்சிக்' படத்திலும், மலையாளத்தில் 'டியர் ஸ்டூடன்ட்ஸ்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் ஒவ்வொன்றாக இந்த வருடத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கில் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'மன ஷங்கர வரபிரசாத் காரு' வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழில் 2006ல் வெளிவந்த 'கேடி' படத்தில் அறிமுகமானவர் தமன்னா. அடுத்து 'கல்லூரி, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வீரம், தோழா, தர்மதுரை, தேவி, பாகுபலி 1,2,' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக 2024ல் வெளிவந்து வெற்றி பெற்ற 'அரண்மனை 4' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தமிழில் நடிக்கவேயில்லை. ஹிந்தி, தெலுங்கு பிஸியாக இருந்தார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் 'புருஷன்' படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதற்கு முன்பு சுந்தர் சி, விஷால் கூட்டணியில் 'ஆக்ஷன்' படத்தில் நாயகியாக நடித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

இருந்தாலும் 'புருஷன்' படத்தின் அறிமுக வீடியோ படம் மீதான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 9 மில்லியன் பார்வைகளை அந்த வீடியோ பெற்றுள்ளதே அதற்குக் காரணம். அவ்வப்போது இடைவெளிவிட்டு தமிழுக்கு வந்தாலும் இந்த இருபது வருடமாக நடித்து வருவதே ஒரு சாதனைதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !