'வா வாத்தியார்' இரண்டே வாரங்களில் ஓடிடி ரிலீஸ், ஏன் ?
நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியான படம் 'வா வாத்தியார்'. படம் வெளியான இரண்டே வாரங்களில் இன்று (ஜனவரி 28ம் தேதி) இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
பொதுவாக ஒரு புதிய படம் நான்கு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும். அதையும் எட்டு வாரங்கள் என மாற்ற வேண்டும் என தியேட்டர் உரிமையாளர் சங்கங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் இரண்டு வார ஓடிடி வெளியீடு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து தியேட்டர் சங்கத்தினர் இன்னும் எதுவும் சொல்லவில்லை.
இதனிடையே, படத்தின் இரண்டு வார ஓடிடி ரிலீஸ் ஏன் என்று விசாரித்த போது தியேட்டர்களில் படம் சரியாகப் போகவில்லை. நீதிமன்ற வழக்கு காரணமாக டிசம்பர் 5, டிசம்பர் 12 என படம் தள்ளிப் போய் பின்னர் ஜனவரி 14ல் வெளியானது. அதுவும் கடைசி சில நாட்களில் எடுத்த முடிவு என்பதால் தமிழைத் தவிர திட்டமிட்டபடி தெலுங்கிலும் படத்தை வெளியிட முடியவில்லை.
மேலும் படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம் தந்த ஒரு நெருக்கடியும் காரணம் என்கிறார்கள். அதனால், தியேட்டர்காரர்கள் தரப்பில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளித்துவிட்டு ஓடிடி நிறுவனத்தின் ஒப்பந்தப்படி படத்தைக் கொடுத்தால் பெரும் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பதால் இதற்கு சம்மதித்தார்களாம்.
டிசம்பர் 12 படம் தள்ளிப் போகிறது என்றதுமே ஓடிடி நிறுவனம் வாங்கிய உரிமை ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவிலும் இருந்தது என்கிறார்கள். அப்படி நடந்திருந்தால் தியேட்டர் நஷ்டம் அல்லாது ஓடிடி நஷ்டமும் அதிகமாகியிருக்கும். பட வெளியீட்டிற்குப் பிறகு இந்தப் படத்தின் தோல்வியால் அதை யாரும் வாங்க முன் வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் மிகக் குறைந்த விலைக்கே கேட்பார்கள் என்ற காரணத்தாலேயே இரண்டு வார ஓடிடி ரிலீஸ் முடிவு எடுக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 'வா வாத்தியார்' தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு விஜய், விஜய் சேதுபதி நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் 2021ல் தியேட்டர்களில் வெளியான 16 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கடுத்து இப்போது 'வா வாத்தியார்' 14 நாட்களில் வெளியாகி உள்ளது. 'மாஸ்டர்' வெளியான போது கொரானோ இரண்டாம் அலை இருந்தது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தியேட்டர்களில் அனுமதி தந்தார்கள். அதன் காரணமாக சீக்கிரமாக ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள்.