திருவண்ணாமலையில் ஏறிய நடிகையிடம் வனத்துறை விசாரணை
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது . இந்தக் கோவிலின் பின்புறம் உள்ள மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இங்கு யாரும் அனுமதி இன்றி மேலே ஏற முடியாது என்பதுதான் வனத்துறையின் விதிமுறையாகும்.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் ரீல்ஸ் எடுக்கும் ஆசையில் மலை உச்சிவரை தனியாக சென்று திரும்பி இருக்கிறார். அதாவது வனத்துறையின் அனுமதியின்றி சென்று வந்திருக்கிறார். அவர் சென்று வந்து புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கணிசமான பார்வையாளர்களைப் பெற்று அதன் மூலம் வருமானமும் பெற்றிருக்கிறார்.
மேலும் அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் மலையேற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள்' என்று அறிவுரையும் கூறியுள்ளார்.
தற்போது இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள். அனுமதி பெற்று தான் மலை ஏற வேண்டும் என்று தனக்கு தெரியாது என்றும் அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கூறி வருவதாக தெரிய வருகிறது.
அர்ச்சனா ரவிச்சந்திரன் 'ராஜா ராணி, பாரதி கண்ணம்மா தேன்மொழி, இந்திரா' உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.