உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ப்ராமிஸ்' ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

'ப்ராமிஸ்' ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்


அம்மன் கிரியேஷன் சார்பில் என்.நாகராஜன் தயாரித்துள்ள படம் 'ப்ராமிஸ்'. கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். நாயகியாக நதியா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன், தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் காதல் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் என்.நாகராஜன் பேசியதாவது: இந்த படத்தின் இயக்குநரை 2023ல் வேலூரில் சந்தித்தேன். அவர் ஒரு கதையைச் சொன்னார். நீங்கள் தான் தயாரிப்பாளர் என்றார். எனக்கு உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை. யோசித்துச் சொல்கிறேன் என்றேன். ஆறு மாதம் போனது. இதை என் மனைவியிடம் கூறிய போது செய்யலாம் என்றார். 2024 ஆகஸ்ட் 15ல் படம் பூஜை போடப்பட்டது.

அப்படியே படக்குழு உருவாகி இந்தப் படத்தை முடித்து விட்டோம். இயக்குநர் நல்ல திறமைசாலி, உழைப்பாளி. அவரைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் படத்தில் வசனங்கள், பாடல்கள் எல்லாம் முடிந்தவரை தமிழில் இருக்க வேண்டும் என நினைத்தோம். வேறு வழியில்லாமல்தான் தலைப்பை 'ப்ராமிஸ்' என ஆங்கிலத்தில் வைத்தோம்.

இப்போது படம் முடிந்து வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறது. மக்களை நோக்கித் தேர்வு எழுதுவது போல் ஒரு மன நிலையில் இருக்கிறோம். இந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். முடிவு மக்கள் கையில் இருக்கிறது. இந்தப் படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்தார்கள், ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதை மறக்க முடியாது. தங்கள் சொந்தப் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். அனைவருக்கும் நன்றி. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !