உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவை விதைத்துக் கொண்டே இருப்போம்: செழியன்

சினிமாவை விதைத்துக் கொண்டே இருப்போம்: செழியன்


இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்டவர் ஒளிப்பதிவாளர் செழியன். 'தி பிலிம் ஸ்கூல்' எனும் பெயரில் சினிமா பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பயிற்சி பெற்ற 34 மாணவர்கள் 34 படங்களை இயக்க இருக்கிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தி பிலிம் ஸ்கூல் செழியனுடன் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீ ராம், ரவிவர்மன், வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளர்- விமர்சகர் தனஞ்ஜெயன், இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ஹரிஹரன், ஒலிப்பதிவு கலைஞர் தபஸ் நாயக், திரைப்பட திறனாய்வாளர் மருத்துவர் தாயப்பன், எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழ் பிரபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் செழியன் பேசியதாவது: நான் 'உலக சினிமா' என்ற புத்தகத்தை எழுதுவதற்கு முன் ஜெர்மானிய இயக்குநர் வெர்னர் ஹெர்சாக்கைப் பற்றி படித்தேன். அவர் ஒரு பிலிம் ஸ்கூலில் படிக்கிறார். படித்து முடித்தவுடன் அவர் ஒரு கண்ணாடி கூண்டிற்கு முன் நிற்கிறார். அப்போது அவர் அதிலிருந்து ஒரு கேமராவை கொடுங்கள், நான் படம் எடுத்துவிட்டு தருகிறேன் என்கிறார். அது இன்ஸ்டியூட்டில் உள்ள கேமரா. அதனை கொடுக்க முடியாது என்கிறார்கள். அவர் அன்றிரவு அந்த கண்ணாடி கூண்டை உடைத்து ஒரு கேமராவை எடுத்து, படத்தை எடுத்த பின் மீண்டும் கேமராவை ஒப்படைக்கிறார்.

அதன் பிறகு அவரைப் பற்றிய நிறைய விஷயங்களை தேடத் தொடங்கினேன். அதன் பிறகு அவர் ரோக் பிலிம் ஸ்கூலில் படித்தார் என்ற தகவலை உறுதியாக பிடித்துக் கொண்டேன். ரோக் என்றால் நாடோடி, கலகக்காரன், ஊர் சுற்றி, இப்படி எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். அதன் பிறகு அவர் படித்த ஸ்கூலில் சேர்வதற்கான விதிமுறைகளை ஆராய்ந்தேன். அந்த ஸ்கூலில் சேர வேண்டும் என்றால் 12 புத்தகங்கள் வாசித்திருக்கவேண்டும். எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்லாமல் நடைப்பயணமாகவே செல்ல வேண்டும். சென்ஸிபிலிட்டி இருக்க வேண்டும். ஒரு நான்கு வயது குழந்தைக்கு அரை மணி நேரம் கவனம் சிதறாமல் கதை ஒன்றை சொல்ல வேண்டும். இதெல்லாம் செய்ய முடியும் என்றால் எங்களுடைய பிலிம் ஸ்கூலில் சேர முடியும் என்கிறார்.

அவரிடம் பிலிம் ஸ்கூலின் முகவரியை கேட்கிறார்கள். அந்த முகவரி நான்தான் என்கிறார். ஒரு நாடோடியாக இருக்கிறார். நியூசிலாந்தில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும். ஜெர்மனியில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும்.அதன் பிறகு ஈரானிய இயக்குநர் மக்மல்பாப்பை சென்னையில் சந்தித்தேன். அவருடன் மூன்று நாட்கள் உடனிருந்தேன். அவர் ஒரு பிலிம் ஸ்கூலை நடத்திக் கொண்டிருந்தார். உங்களுடைய பிலிம் ஸ்கூலுக்கான சிலபஸ், அட்மிஷன் ப்ரொசீஜர் என்ன என கேட்டேன்.

ஏதேனும் ஒரு கவிதை புத்தகத்தை ஒரு வாரம் வரை படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு ஓவியரை மட்டும் தெரிவு செய்து அவருடைய ஓவியப் படைப்புகளை தொடர்ந்து ஒரு மாதம் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளை ஒரு மாதம் வரை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு தினமும் 50 கிலோ மீட்டர் வரை தூரம் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும். ஒரு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். நான் உடனடியாக உங்களுடைய பிலிம் ஸ்கூலில் நான் சேர இயலுமா எனக் கேட்டேன். அதற்கு அவர், அரசுக்கு எதிராக திரைப்படம் எடுக்கிறேன் என்று சொல்லி என்னை நாடு கடத்தி விட்டார்கள். நான் ரஷ்யாவில் இருக்கிறேன். ரஷ்யாவில் இருந்து தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். நான்தான் அந்த பிலிம்ஸ் ஸ்கூல் என்றார்.

அதன் பிறகு அவர் நான் ஒரு 15 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களை எல்லாம் ஓரிடத்தில் ஒன்றிணையுங்கள். சேர்ந்து சினிமாவை பற்றி பத்து நாள் பேசுவோம். பதினோராவது நாள் திரைப்படத்தின் பணிகளை தொடங்கி, 15 நாளில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விடுவோம், என்றார். இதுதான் என்னுடைய பிலிம் ஸ்கூலின் கான்செப்ட். இதனை பிரம்மாண்டமாகவோ, விழாவாகவோ, நிறுவனமாகவோ உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. தீவிர சினிமாவை பற்றி பேசும் நண்பர்கள், இலக்கியத்தைப் பற்றி தீவிரமாக பேசும் நண்பர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இயங்கும் அமைப்புதான் இது.

சென்னையில் எங்கேனும் 500 குடியிருப்புகள் உள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டால்... அதன் அருகே அரசு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும். அதில் புல்வெளி இருக்க வேண்டும். மரங்கள் இருக்க வேண்டும். இது விதி. அதேபோல் சினிமா ஒரு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி. செயற்கையான பிரம்மாண்டமான கட்டடங்கள் இருக்கும் போது இயற்கையான புல்வெளியும், மரங்களும் எப்படி இருக்க வேண்டுமோ, அதே போல் தான் இந்த பிலிம் ஸ்கூலின் சினிமா. இப்பொழுது எல்லா நேரங்களிலும் ஏசியில் தான் இருக்கிறோம், இயங்குகிறோம். சிறிது நேரம் புல்வெளியிலும் காலாற நடக்க வேண்டும்.

மூன்று கோடி முதல் 300 கோடி வரை படம் எடுங்கள். அவை அனைத்தும் வெற்றி பெறட்டும். 20 லட்ச ரூபாய் முதலீட்டிலும் சில திரைப்படங்கள் உருவாகட்டும். இத்தகைய முயற்சிக்கு இங்குள்ள பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வருடத்திற்கு 10 அல்லது 12 நாட்கள் ஒதுக்கீடு செய்து ஆதரித்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். கமர்ஷியல் சினிமாவும் வெற்றி பெறும், சிறிய பட்ஜெட் படங்களும் வெற்றி பெறும். இருவரும் இணைந்து வளர்வார்கள். இந்த துறையும் வளர வேண்டும்.

சினிமாவிற்கு ஆர்கானிக்கான ஒரு விசயமும் தேவை. 'விதைத்துக்கொண்டே இருங்கள்' என நம்மாழ்வார் அடிக்கடி குறிப்பிடுவார். அதனால் நாங்கள் விதைத்து கொண்டே இருக்கிறோம். அவர் விவசாயத்தில் செய்ய திட்டமிட்டது இயற்கை விவசாயம். நாங்கள் செய்யத்திட்டமிடுவதும் இயற்கையான சினிமா விவசாயம். இவ்வாறு செழியன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !