'டான்-3'ல் இருந்து வெளியேறிய ரன்வீர் சிங் ; இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு
ஹிந்தியில் கடந்த 2006ல் ஷாருக்கான் நடிப்பில் பர்ஹான் அக்தர் இயக்கத்தில் வெளியான படம் 'டான்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் இதே பர்ஹான் அக்தர், ஷாருக்கான் கூட்டணியில் கடந்த 2011ல் 'டான் 2' என்கிற பெயரில் வெளியானது. இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது இதன் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இறங்கினார் இயக்குனர் பர்ஹான் அக்தர்.
இதற்காக தான் ஏற்கனவே கையில் எடுத்திருந்த பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப் மற்றும் ஆலியா பட் நடிக்க இருந்த 'ஜி லீ ஜாரா' படத்தையும் கிடப்பில் போட்டு விட்டார். அதேசமயம் 'டான் 3' படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் பர்ஹான் அக்தர். ஆனால் சமீபத்தில் வெளியான துரந்தர் படத்தின் வெற்றி ரன்வீர் சிங்கின் போக்கையே மாற்றிவிட்டது.
அவர் திடீரென இந்த டான் 3 திரைப்படத்திலிருந்து வெளியேறி விட்டார். இந்த படத்திற்கு ரன்வீர் சிங் மிகப்பெரிய பலம் என நினைத்த பர்ஹான் அக்தர் தற்போது அவர் வெளியேறி விட்டதால் 'டான் 3' திரைப்படத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு, ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டிருந்த பிரியங்கா சோப்ராவின் 'ஜி லீ ஜாரா' படத்தை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளாராம்.