கடந்த வாரம் இசையமைப்பாளராக 'ஹாப்பி', இந்த வாரம் நடிகராக 'ஹாப்பி' கிடைக்குமா ?
தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஜிவி பிரகாஷ்குமார். அவரது 101வது படமாக கடந்த வாரம் வெளிவந்த 'யூத்' படம் இளம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று தற்போது வரை 28 கோடி வசூலைப் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் அனைவரும் 'ஹாப்பி' என்று தகவல் வந்துள்ளது.
இசையமைப்பாளராக இந்த வருடத்தில் இதுவரை 'பராசக்தி, யூத்' ஆகிய படங்கள் ஜிவி பிரகாஷுக்கு வந்துள்ளன. நடிகராக ஓடிடி தளத்தில் 'லக்கி த சூப்பர்ஸ்டார்' படம் கடந்த மாதம் வந்தது. நடிகராக 2021ல் வெளிவந்த 'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு ஜிவி பிரகாஷ் நடித்து வெளிவந்த படங்கள் குறிப்பிடும்படி ஓடவில்லை. இருந்தாலும் அவர் கைவசம் சில படங்கள் உள்ளன.
இந்த வாரம் மார்ச் 27ம் தேதி 'ஹாப்பி ராஜ்' படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரைலரைப் பார்த்தவர்களுக்கு படம் மீதான ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நடிகர் ஜிவி பிரகாஷின் முந்தைய தோல்விகளை இந்தப் படம் சரி செய்து அவரது நடிப்புப் பயணத்தை மீண்டும் 'ஹாப்பி' ஆக மாற்றும் என்றும் சொல்கிறார்கள். ஓரிரு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.