உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'லீடர்' படத்தை இணையதளத்தில் வெளியிட கோர்ட் தடை

'லீடர்' படத்தை இணையதளத்தில் வெளியிட கோர்ட் தடை


சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் 'லெஜண்ட்' படத்தை தொடர்ந்து தற்போது 'லீடர்' படத்தை தயாரித்து நடித்துள்ளார். இன்று அந்த படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், லீடர் என்ற திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ளேன். இந்த திரைப்படத்தில் ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

இந்த படத்தின் காப்புரிமை அனைத்தும் என்னிடம்தான் உள்ளது. பொதுவாக புதிய திரைப்படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரத்துக்குள் சட்ட விரோதமாக அந்த படத்தை வலைதளங்கள் வெளியிடுகின்றன. இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த வலைதளங்களின் விவரங்களை தாக்கல் செய்துள்ளேன். நான் நடித்து தயாரித்துள்ள 'லீடர்' திரைப்படத்தை இந்த வலைதளங்கள் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கவேண்டும். என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், லீடர் படத்தை இணையதளங்கள் சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்து வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !