பல்கலைகழகத்திற்கு உள்ளும் நுழைந்தது சினிமா
தற்போது பெரும்பாலான தமிழ் படங்களின் நிகழ்வுகள் தனியார் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களில் சினிமா விழாக்கள் நடத்துவது மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நேரத்தில் 'ரூம்பாய்' என்ற திரைப்படத்தின் நிகழ்வு அரசு கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடந்துள்ளது.
வருகிற 17ம் தேதி வெளிவரும் இந்த படத்தை ஏசிஎஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சூர்யகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ளார். நிகில் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 'அரண்மனை 4' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்கள் தவிர இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், கலை, கற்பகம் மற்றும் கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர்,கேரளா பெஹமின் உட்பட பலர் நடித்துள்ளனர். சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சகாதேவன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.