58 மணி நேரத்தில் 100 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3'
மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'திரிஷ்யம் 3' மலையாளப் படம் மே 21ம் தேதி வெளியானது. முதல் நாள் வசூலாக 50 கோடியே 35 லட்சம் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
அடுத்து 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலித்ததாக நேற்று மாலை அறிவித்துள்ளார்கள். இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், மூன்று நாட்களுக்குள்ளாக இப்படம் 100 கோடி வசூலித்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
100 கோடி வசூலைக் கடந்த மோகன்லாலின் 5வது படமாக இது அமைந்துள்ளது. ‛‛லூசிபர், புலி முருகன், தொடரும், எல் 2 எம்புரான்” ஆகிய படங்கள் மோகன்லால் நடித்து 100 கோடி வசூலித்த படங்கள்.
மலையாளத் திரையுலகத்தில் இதுவரையில் 16 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. அதில் மோகன்லால் நடித்த படங்கள்தான் அதிகமான 100 கோடி வசூலைப் பெற்றுள்ளன. 200 கோடி வசூலைக் கடந்த 5 படங்களில் மோகன்லால் நடித்த 'தொடரும், எல் 2 எம்புரான்' ஆகிய 2 படங்கள் இடம் பெற்றுள்ளன.
'திரிஷ்யம் 3' படமும் 200 கோடி வசூலைக் கடக்குமா என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.