உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயகாந்த் நடிப்பில் இன்றும் பேசப்படும் 10 படங்கள் : பிறந்தநாள் ஸ்பெஷல்

விஜயகாந்த் நடிப்பில் இன்றும் பேசப்படும் 10 படங்கள் : பிறந்தநாள் ஸ்பெஷல்

புரட்சி கலைஞர், கேப்டன் என்று கொண்டாடப்படும் மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் 74வது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள், கட்சியினர், நண்பர்கள் இன்று கொண்டாடி வருகிறார்கள்.

1978ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் 155 படங்களில் நடித்து இருக்கிறார். 1980ல் வெளிவந்த 'தூரத்து இடிமுழக்கம்' அவருக்கு முக்கியமான படம். எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் 1981ல் வெளியான ‛சட்டம் ஒரு இருட்டறை' அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. தயாரிப்பாளர், இயக்குனர் என சினிமாவில் பல பணிகளை செய்தவர் 2023ம் ஆண்டு தனது 71வது வயதில் காலமானார்

விஜயகாந்த் நடித்ததில் மிகவும் பிரபலமான, மக்களால் பாராட்டப்பட்ட டாப் 10 படங்கள்...

1 வைதேகி காத்திருந்தாள்



ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான உணர்வுப்பூர்வமான படம். இளையராஜாவின் பாடல்களுக்கே இந்த படம் ஓடியது என்பார்கள். கவுண்டமணியின் பெட்ரமாஸ் லைட் காமெடியும் பிரபலம். அழுக்குதலை ,கிழந்த உடை, தண்ணீர் எடுத்து கொடுக்கும் கேரக்டர் என மாறுபட்ட வேடத்தில் நடித்து கலக்கியிருந்தார் விஜயகாந்த். இந்த படத்தின் வெற்றி, விஜயகாந்த்தை பட்டி தொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது.

2) அம்மன்கோயில் கிழக்காலே



ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ராதா நடித்த கிராமத்து கதை. முதலில் இந்த கதையில் நடிக்க இருந்தவர் ரஜினிகாந்த். அடுத்து முரளி பேசப்பட்டார். கடைசியில், விஜயகாந்த்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது. கிராமத்து எளிய பாடகர், பணக்கார திமிர் பிடித்த ஹீரோயின் என்ற கருவில் உருவான இந்த படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் ஒரு முக்கியமான காரணம். 1986ல் படம் வெளியானது. தெலுங்கில் இந்த பட ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்தார். கன்னடத்திலும் அம்ரீஷ் நடிக்க ரீமேக் ஆனது. கிராம மக்களை விஜயகாந்த்தை சென்றடைய வைத்த படம் இது.

3) ஊமை விழிகள்



தமிழ் சினிமாவில் திரைப்பட கல்லுாரி மாணவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்த படம். ஆபாவாணன் தயாரிக்க, அரவிந்த்ராஜ் இயக்கினார். இந்த படமும் 1986ல் வெளியானது. கதையை நம்பி, சற்றே முதிர்ந்த தோற்றத்தில் போலீஸ் ஆபீசராக நடித்தார் விஜயகாந்த். மனோஜ் கியான் இசையில் மாமரத்து பூ எடுத்து, ராத்திரி நேரத்து பூஜையில், தோல்வி நிலையென நினைத்தால் போன்ற பாடல்கள் ஹிட்டாகின. இந்த படத்தை தொடர்ந்து ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் உட்பட பல திரைப்பட கல்லுாரி மாணவர்கள் கமர்ஷியல் படங்களை இயக்கியனர். அதற்கு விதை போட்டவர் விஜயகாந்த்.

4) புலன் விசாரணை



திரைப்படக் கல்லுாரி மாணவரான ஆர்.கே.செல்வமணி இயக்குனர் ஆன படம். ஹீரோவாக விஜயகாந்த், வில்லனாக சரத்குமார் மோதிய படம். இன்றும் இந்த படத்தின் கதை, திரைக்கதை, சண்டைக்காட்சிகள் பேசப்படுகின்றன. 6 படங்களின் தோல்வியை பெற்றிருந்த விஜயகாந்த் இந்த படம் வெற்றியை கொடுத்து, அவரின் கல்யாண பரிசாக அமைந்தது.

5) சத்ரியன்



கே.சுபாஷ் இயக்கத்தில் 1990ல் வெளியான படம். இப்படத்தின் கதை மற்றும் வசனங்களை மணிரத்னம் எழுதியிருந்தார். விஜயகாந்தின் காவல்துறை மிடுக்கு மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றக்குக் காரணமாக அமைந்தன.

6) கேப்டன் பிரபாகரன்



ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991ல் வெளியான வெற்றி படம். விஜயகாந்த் நடித்த 100வது படமும் கூட. ஹீரோக்களின் 100வது படம் வெற்றி பெறாது என்ற சென்டிமென்டை உடைத்த படம். சந்தன கடத்தல் வீரப்பன் கதை பின்னணியில் உருவான இந்த படத்துக்குபின் கேப்டன் என்ற அடைமொழி விஜயகாந்த்துடன் ஒட்டிக் கொண்டது. இளையராஜாவின் ஆட்டமா தேரோட்டமா பாடல் பெரிய ஹிட்டானது. இதில் கவுரவ வேடத்தில் நடித்தவர் சரத்குமார். முதலில் ரம்யா கிருஷ்ணன் ரோலில் நடிக்க இருந்தவர் சரண்யா பொன்வண்ணன். ரீ ரிலீசிலும் இந்த படம் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் சிறந்த கமர்ஷியல் படங்களில் கேப்டன் பிரபாகரனுக்கு தனி இடமுண்டு.

7) சின்னக்கவுண்டர்



ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான படம். படத்தின் மாறுபட்ட கதை, நடிகர்களின் நடிப்பு, செந்தில் கவுண்டமணி காமெடி, கிளைமாக்ஸ் ரசிகர்களை கவர்ந்தது. இன்றும் விஜயகாந்த் இரங்கல் கூட்டங்களில், அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே பாடல் பாடப்படுகிறது. அந்த அளவுக்கு அப்போதே அந்த வரிகள் பொருத்தமாக அமைந்தன

8) வானத்தை போல



அதிரடியாக, ஆக் ஷனில் வெளுத்து வாங்கும் விஜயகாந்த்தை அமைதியாக அண்ணனாக நடிக்க வைத்தார் இயக்குனர் விக்ரமன். 2000ல் வெளியான இந்த படம் அண்ணன், தம்பி பாசத்தை, கூட்டுக் குடும்ப வலிமையை சொன்னது. பலரும் விஜயகாந்த்தை தங்கள் அண்ணனாக பார்த்தார்கள். தேசிய விருது, மாநில அரசு விருதுகளை படம் வென்றது. ஏ.ஏ.ராஜ்குமார் இசையும், பாடல்களும் முணுமுணுக்க வைத்தன.

9) வல்லரசு



கார்கில் யுத்ததிற்கு பின் இந்தியாவில் ஊடுறுவி வெடி குண்டு வைக்க நினைக்கும் தீவிரவாதியை போலீஸ் ஆபிசரான விஜயகாந்த் சுட்டுக் கொல்லும் கதை. அந்த கேரக்டருக்கு பக்காவாக செட்டானார் விஜயகாந்த். மன்சூர் அலிகான், விஜயகாந்த் சம்பந்தப்பட்ட ஜாதி சங்க சீன்கள் தியேட்டர்களில் கைதட்டலை அள்ளியது. மகாராஜன் இயக்கினார். தெலுங்கிலும், ஹிந்தியிலும் கூட இந்த படம் ரீமேக் ஆனது. 2000ம் ஆண்டு வெளியானது

10) ரமணா



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான லஞ்சத்துக்கு எதிரான கதை. இன்றைக்கும் ரமணாவை கொண்டாடுகிறார்கள். பணம் பறிக்கும் ஆஸ்பத்திரிகளின் மறுபக்கத்தை வெளுத்து வாங்கினார் விஜயகாந்த். குடும்பத்தினர் நண்பர்கள் வேண்டாம் என சொன்ன போதிலும், கதைக்காக தனது கேரக்டர் இறப்பது மாதிரியான ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2002ல் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த படங்கள் தவிர விஜயகாந்த் நடிப்பில் ‛‛சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி, நானே ராஜா நானே மந்திரி, உழவன் மகன், பூந்தோட்டக் காவல்காரன், செந்துாரப்பூவே, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், மாநகரக் காவல், ஏழை ஜாதி, செந்தூரப்பாண்டி, சேதுபதி ஐபிஎஸ், ஆனஸ்ட்ராஜ், உளவுத்துறை, கள்ளழகர், தவசி, சொக்க தங்கம், எங்கள் அண்ணா'' படங்களும் மக்களால் பாராட்டப்பட்டன.

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ஊமை விழிகள் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அரவிந்த்ராஜிடம் உங்களுக்கு பிடித்த 10 விஜயகாந்த் படங்களை சொல்ல முடியுமா என்று கேட்டோம்.

அவர் கொடுத்த பட்டியல் இது... ‛‛வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்ட காவல்காரன், சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ரமணா, வானத்தைபோல, புலன் விசாரணை, நரசிம்மா, மாநகரக்காவல், தாயகம்''.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !