உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சீர்காழி - சிவாஜி மோதல்

பிளாஷ்பேக்: சீர்காழி - சிவாஜி மோதல்


பொதுவாக பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார். பாடல் வாய்ப்பும் கேட்க மாட்டார். தன்னை தேடி வருகிற பாடல்களை மட்டும்தான் பாடுவார். அப்படிபட்டவர் சிவாஜியோடு மோதிய ஒரு நிகழ்வு நடந்தது.

1963ம் ஆண்டு கிருஷ்ணன்- பஞ்சு இயக்கத்தில், வெளியான படம் 'குங்குமம்'. இந்தப் படத்தில் சிவாஜி, சாரதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தில், கண்ணதாசன் உட்பட 4 கவிஞர்கள் பாடல் எழுதியிருந்தனர். இந்த படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தது; அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள்.

இந்த படத்தில் ஒரு கொலை நடக்கும். அந்த கொலையை கண்டுபிடிக்க சிவாஜி பல மாறுவேஷங்கள் போட்டு கொலையாளியை தேடுவார். இந்த கொலையில் சாரதாவிற்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படும் சிவாஜி தான் ஒரு பண்டிதர் போன்று அவரது வீட்டுக்குள் நுழைந்து அவர்களுடன் நெருக்கமாகி விடுவார்.

சாரதா அடிப்படையில் ஒரு பாடகி, அவர் மேடையில் 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா' என்ற பாடலை பாடுவார். இடையில் வரிகளை மறந்து திணறுவார். அப்போது சிவாஜி எழுந்து அந்த மீதி பாடலை பாடி முடிப்பார்.

இந்த பாடலை முதலில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருந்தார், பாடலை கேட்ட சிவாஜிக்கு திருப்தி இல்லை. 'எனது கேரக்டருக்கு இந்த குரல் பொருந்தவில்லை. வழக்கமாக பாடுகிற டி.எம்.சவுந்தர்ராஜனை பாட வையுங்கள்' என்றார். அதை ஏற்ற இயக்குனரும், இசை அமைப்பாளரும் சீர்காழி பாட்டை நீக்கி விட்டு டி.எம்.சவுந்தர்ராஜனை பாட வைத்தனர்.

இதனை கேள்விப்பட்ட சீர்காழி கோவிந்தராஜன், சிவாஜிக்கு போன் செய்து “யாருக்கு வேண்டுமானாலும் பந்தி வையுங்கள், ஆனால் அடுத்தவன் சாப்பிட்ட இலையில் வைக்காதீர்கள். இனி உங்களுக்காக ஒரு போதும் பாட மாட்டேன்” என்று கூறி போனை வைத்து விட்டார்.

இதனால் சிவாஜி அதிர்ச்சி அடைந்தார். பிறகு சில காலங்களுக்கு பிறகு இருவரும் சமாதானமாகி விட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !