பிளாஷ்பேக் : கருப்பு நிற பெண்ணாக நடித்த விஜயகுமாரி
விஜயகுமாரி நடித்த முக்கியமான படங்களில் ஒன்று 'நானும் ஒரு பெண்'. படங்கள் கருப்பு, வெள்ளையில் தயாராகி வந்த காலத்தில் கருப்பாக இருக்கிற பெண் சினிமாவை நினைத்து பார்க்கவே முடியாது. அப்படியான சூழ்நிலையில், நல்ல சிவப்பு நிற அழகை கொண்ட விஜயகுமாரி துணிச்சலாக கருப்பு பெண்ணாக நடித்த படம். 'போது' என்ற பெங்காலி நாடகத்தை தழுவி இந்த படம் உருவானது. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி இருந்தார். கே.பி.கொட்டாரக்கரா தயாரித்திருந்தார்.
கருப்பு நிறத்தில் பிறந்த ஒரு பெண்ணை இந்த சமூகம் ஒதுக்குகிறது. அவளை பழிக்கிறது. தனது குணத்தாலும், கல்வியாலும் இந்த நிறக்கேலியை அவள் எப்படி வெற்றியாக மாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. ஏவிஎம் நிறுவனம் யாரை கூப்பிட்டாலும் ஓடிவந்து நடிப்பார்கள். ஆனால் இந்த கதையில் நடிக்க அழைத்தபோது பயந்து ஓடினார்கள். துணிந்து நடித்தவர் விஜயகுமாரி.
என்றாலும் அவருக்கு ஒரு பயம் இருந்தது. ஒரு நாள் ஏவிஎம்மில் படப்பிடிப்பு நடந்தபோது பக்கத்து புளோரில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்தார். இதை கேள்விப்பட்ட விஜயகுமாரி, கருப்பு மேக்அப்புடன் சிவாஜியை சந்தித்து 'அண்ணா இந்த மேக்அப்புடன் இந்த கேரக்டரில் நடிக்கிறேன் சரியாக வருமா' என்றார். அவரை மேலும் கீழும் பார்த்த சிவாஜி. 'நீ கொடுத்து வைத்தவள். நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் ஏவிஎம் செட்டியரை பார்த்து இந்த கேரக்டரில் நான்தான் நடிப்பேன் என்று அடம் பிடிப்பேன். இந்த படம் உனக்கு பெரிய வெற்றியை தரும்' என்றார்.
அவர் சொன்னது போலவே படமும் பெரிய வெற்றி பெற்று, படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. விஜயகுமாரியும் பல விருதுகளை வென்றார். இந்த படத்தில் அவருடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவிஎம் ராஜன், புஷ்பலதா, ரங்காராவ், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்.சுதர்சனம் இசை அமைத்திருந்தார்.