பிளாஷ்பேக் : பேயாக நடித்த கஸ்தூரி
எல்லா நடிகர்களுக்கும் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் ஆசை இருப்பதை போன்று எல்லா நடிகைகளுக்கும் பழிவாங்கும் பேயாக நடிக்கும் ஆசை இருக்கும்போல... அந்த வரிசையில் 90களில் குடும்ப பாங்கான படங்களில் நடித்து வந்த கஸ்தூரி பேயாக நடித்த படம் 'ராசாத்தி வரும் நாள்'. இந்த படத்தை ரபி என்பவர் இயக்கி இருந்தார். நிழல்கள் ரவி, கஸ்தூரியின் கணவனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார்.
பணக்காரர் நாசரின் மகளான கஸ்தூரி செல்வ செழிப்புடன் வளர்கிறவர். அவருக்கு போலீஸ் அதிகாரி நிழல்கள் ரவி உடன் திருமணமும் ஆகிறது. சின்ன விபத்தில் சிக்கும் கஸ்தூரிக்கு ஒரு நகை கிடைக்கிறது. அந்த நகை கிடைத்த பிறகு அவரது வாழ்க்கை மாறுகிறது. கெட்ட சம்பவங்கள் நடக்கத் தொடங்குகிறது. இதேநேரத்தில் நகரில் அடுத்தடுத்து கொலை நடக்கிறது. அதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார் நிழல்கள் ரவி.
அந்த கொலைகளை செய்வது கஸ்தூரி. பல ஆண்டுகளுக்கு முன்பு பலரால் பலாத்காரம் செய்யப்பட்ட ராசாத்தி என்ற பெண் கஸ்தூரி எடுத்த நகை வழியாக அவருக்குள் புகுந்து தன் வாழ்வை பாழாக்கியவர்களை பழிவாங்குகிறார். இதை நிழல்கள் ரவி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் திரைக்கதை. படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பையும் பெற்றது.