தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியாவில் கலை நிகழ்ச்சி : குஷ்பு தகவல்
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் குஷ்பு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் குட்டி பத்மினி, பாலேஷ்வர், அழகன் தமிழ்மணி, ஒய்.ஜி.மகேந்திரன், சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதுகுறித்து குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது : ‛‛திரைக்குப் பின்னால் இருந்து பணியாற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பலருக்கும் தெரிவதில்லை. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டும் வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தயாரிப்பாளர்கள் சார்பில் பல கோரிக்கைகளை அரசுக்கு விடுத்திருக்கிறோம். நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.