பிளாஷ்பேக்: வெள்ளி விழா தீபாவளி படம் 'ஆளவந்தான்'
முன்பெல்லாம் தீபாவளிக்கு சிறியதும், பெரியதுமான பத்து படங்கள் வரை வெளியாகும். ஆனால் தற்போது தியேட்டர் தட்டுப்பாடு, பெரிய படங்களை சமாளிக்க முடியாத சிறிய படங்கள் என காலம் மாறிவிட்டதால் தீபாவளிக்கு நான்கைந்து படங்களே வெளிவருகிறது. அதுவும் இந்த தீபாவளிக்கு சூர்யா நடித்த 'சீன்', நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்களே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 25 ஆண்டுகளுக்கு முந்தைய தீபாவளி அன்று (2001ம் ஆண்டு) வெளியாகி வெள்ளி விழா தீபாவளியை கொண்டாடும் படங்கள் பற்றி இந்த வரிசையில் பார்க்கலாம்.
கமல் நடித்த முக்கியமான படமும், மிகப்பெரிய தோல்வி படமும் ஒன்றுதான் அது 'ஆளவந்தான்'. 25 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் உளவியல் பிரச்னையை பேசிய படம். படத்தின் கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும் சிறிய நினைவூட்டல் இது...
நந்து தன் சித்தியைக் கொன்றதற்காகச் சிறுவயதிலேயே சிறை செல்கிறான். சிறு வயதின் கசப்பான அனுபவங்களால் அவனுக்கு மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது. நந்துவின் தம்பி விஜய் ராணுவத்தில் பணிபுரிகிறார். அவர் ரிப்போர்ட்டராகப் பணிபுரியும் தேஜஸ்வினியைக் காதலிக்கிறார். தேஜூ கர்ப்பமாகிவிட, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர்.
மனநலக் காப்பகத்தில் இருக்கும் நந்துவிடம் தேஜூவை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறார் விஜய். சித்தியின் வளர்ப்பால் துயரங்களைச் சந்தித்த நந்து, எல்லா பெண்களையும் அதே கோணத்தில் பார்க்கிறார். தேஜூவையும் தன் சித்தியின் பிரதிபலிப்பாகப் பார்க்கும் நந்து, அவரிடமிருந்து விஜய்யைக் காப்பதே தன் கடமை என உறுதி எடுக்கிறார். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் போகத் தயாராகிறார். முடிவு என்ன என்பதுதான் ஆளவந்தானின் கதை.
திடகாத்திரமான சிக்ஸ் பேக் உடம்பு, மொட்டை தலை என நந்துவாகவே வாழ்ந்திருப்பார் கமல், ராணுவ மிடுக்குடன் இன்னொரு கமல் அவ்வளவு அழகு. முதலில் விஜய் தொடர்பான காட்சிகளை எடுத்து முடித்து விட்டு பின்னர் மொட்டை அடித்து முதலில் எடுத்த அதே இடங்களில் மீண்டும் நடித்து காட்சிகள் உருவாக்கப்பட்டது. தொழில்நுட்பம் வளராத காலத்தில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் இப்போதும் ஆச்சர்யப்படுத்தும்.
1980ம் ஆண்டு ஒரு வார இதழில் 'தாயம்' என்ற தொடர்கதை எழுதினார் கமல்ஹாசன். அந்த கதையை கே.பாலச்சந்தர் இயக்கத்தில் திரைப்படமாக உருவாக்க நினைத்தார். ஆனால் கே.பாலச்சந்தர் இந்த படத்தை எடுப்பதற்கான காலச் சூழல் இதுவல்ல. மக்கள் அதனை ஏற்கமாட்டார்கள் என்று கூறிவிட்டார். ஆனால் 20 வருடங்களுக்கு பிறகு அதே கதையைத்தான் 'ஆளவந்தான்' என்ற பெயரில் எடுத்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தை எஸ்.தாணு தயாரித்தார்.
அன்று தோற்கடித்த படத்தை இன்று கொண்டாடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு நேரம் இருந்தால் ஓடிடியில் காண கிடைக்கும் ஆளவந்தானை இப்போதும் தீபாவளி படமாக பார்க்கலாம்.