வாய்ப்பு கேட்க பயந்த அனிஷ்மா ; வாய்ப்பளித்த 'பிரேமலு' இயக்குனர்
தமிழில் வெளியான 'சிறை' மற்றும் 'யூத்' படங்களின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகை அனிஷ்மா அனில்குமார். ஆனால் இவர் அறிமுகமானது மலையாளத்தில் 'பூவன்' என்கிற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்.. அந்த படத்தை தயாரித்தது 'பிரேமலு' மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஷ் ஏ டி தான். அதற்கு முன்னதாக 'தண்ணீர் மாத்தன் தினங்கள், சூப்பர் சரண்யா' ஆகிய படங்களை அவர் இயக்கி இருந்தார்.
அவரது படங்களை பார்த்து அவரது ரசிகையாகவே மாறிவிட்ட அனிஷ்மா, அவர் தயாரிப்பாளராக தயாரித்த பூவன் திரைப்படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டார். அவருக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே சமயம் அப்போது உங்களது அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு தருவீர்களா என கேட்க நினைத்தாராம் அனிஷ்மா அனில்குமார். ஆனால் பயம் காரணமாக அவர்களிடம் கேட்கவில்லையாம். ஆனால் இயக்குனர் கிரிஷ் ஏடி, பிரேமலு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்கிய 'ஐ அம் காதலன்' படத்திற்கான ஹீரோயின் ஆடிசன் நடந்த போதும் அனிஷ்மா அதில் கலந்து கொண்டார். அப்போது அந்த படத்தின் கதாநாயகி வாய்ப்பை அனிஷ்மாவுக்கு வழங்கினாராம் கிரிஷ் ஏ டி.
இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள அனிஷ்மா, “கிரிஷ் ஏ டியின் படங்களுக்கு நான் ரசிகை. அவரது படங்களின் தனித்துவமான, நகைச்சுவை உணர்வு மிக இயல்பாக ரசிக்கும்படி இருக்கும், குறிப்பாக அவரது படங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் யாவும் எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருப்பதால் படம் பார்ப்பவர்கள் எளிதில் படத்துடன் ஒன்றி விடுவார்கள்” என்றும் ஒரு ரசிகையாக அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் அனிஷ்மா.