ஓடிடி-யில் வெளியாக உள்ளதா மாஸ்டர்?
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியாகி பத்து நாட்கள் ஆகிறது. இந்த பத்து நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்டர் படம் கடந்த வருடம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இத்தனை மாதங்கள் கழித்து வெளியானது.
இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக ஒரு தகவல் பரவியது. முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று படத்தை நேரடியாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த தொகையை அவர்கள் தரத் தயாராக இல்லை. எனவே, அதிலிருந்து பின் வாங்கினர்.
மாஸ்டர் படம் வெளிவந்தால் தான் தியேட்டர்களுக்கு புத்துயிர் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தியேட்டர்காரர்களுக்கு ஓடிடி பேச்சுவார்த்தை அதிர்ச்சியைத் தந்தது. அதன்பிறகு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி வியாபாரத்தில் சில சலுகைகளையும் வழங்கியதாகச் சொன்னார்கள். அதன்பிறகே தியேட்டர்களில்தான் மாஸ்டர் வெளியீடு என அறிவிப்பு வெளியானது.
இதனிடையே, குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையை முன்னணி நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது மாஸ்டர் படத்திற்கு குறிப்பிட்ட சில மாநகரங்களைத் தவிர மற்ற இடங்களில் ரசிகர்கள் வருகை குறைந்துவிட்டதாம்.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும் அடுத்த வாரம் குடியரசு தினம், தைப்பூசம் ஆகிய நாட்களில் விடுமுறை தினம் என்பதாலும் அதுவரையிலும் தியேட்டர்களில் படத்தை ஓட்ட திட்டமிட்டுள்ளார்களாம். அதன்பிறகு எப்படியும் தியேட்டர்களில் மக்கள் வருகை மிகவும் குறைந்துவிடும். அதைக் கணக்கில் கொண்டு திட்டமிட்ட நாளுக்கு முன்னதாகவே மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.
இந்தத் தகவல் அதிகமாகப் பரவினால் தயாரிப்பு நிறுவனம் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்கிறார்கள்.