விளம்பரம் தந்த சினிமா வாய்ப்பு: அபிதா வெங்கட்
ADDED : 1685 days ago
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான கேர் ஆஃப் காதல் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து கவனம் ஈர்த்தவர் அபிதா வெங்கட். சமீபத்தில் வெளியான கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் ஆனந்தியின் தோழியாக நடித்திருந்தார்.
தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் அபிதா வெங்கட் கூறியதாவது: நான் பல வருடங்களாக விளம்பர படங்களில் நடித்து வந்தேன். சினிமா ஆசை இருந்தாலும் எப்படிச் சென்று வாய்ப்பு கேட்பது என்ற தயக்கத்திலேயே பல வருடங்கள் ஓடிவிட்டது. எனது விளம்பர படத்தை பார்த்து விட்டுதான் கேர் ஆஃப் காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளி கேரக்டரிலா நடிக்கப் போகிறாய் என்று பலர் பயமுறுத்தினார்கள். நான் தைரியமாக நடித்தேன்.
இரண்டு படங்களிலுமே நெகட்டிவாக ஆரம்பித்து பாசிட்டிவாக முடிகிற கேரக்டர் அமைந்தது. இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம், நான் மட்டுமல்ல, எந்தவொரு நடிகரும், இதுபோன்ற பாராட்டுக்களுக்காக தான் ஏங்குகின்றன. இத்தகைய ஊக்கம் எனக்கு பன்முக கதாபாத்திரங்களில் எனது சிறந்த நடிப்பைக் கொடுத்து முன்னேற ஊக்குவிக்கும். என்கிறார் அபிதா.