உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2வது தேசிய விருது : ‛சிவசாமியை தந்த வெற்றிமாறனுக்கு நன்றி - தனுஷ் மகிழ்ச்சி

2வது தேசிய விருது : ‛சிவசாமியை தந்த வெற்றிமாறனுக்கு நன்றி - தனுஷ் மகிழ்ச்சி

67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று(மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக ‛அசுரன் படமும், அதில் நடித்த தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. தனுஷிற்கு இது இரண்டாவது தேசிய விருதாகும். அதுவும் ஏற்கனவே தனக்கு ‛ஆடுகளம் படம் மூலம் தேசிய விருது பெற்று தந்த வெற்றிமாறன் மூலமே ‛அசுரன் படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இதற்காக மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

அதில், ‛‛காலையில் எழுந்ததுமே அசுரன் படத்திற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். ஒரு தேசிய விருது பெறுவது என்பதே கனவு. ஆனால் இரண்டு விருதுகள் வென்றிருப்பது ஆசீர்வாதமே. இந்தளவுக்கு நான் வருவேன் என கற்பனை செய்து பார்க்கவில்லை. இந்த தருணத்தில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என் குருவான அண்ணன் மற்றும் இந்த சிவசாமியை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.


முதன்முதலில் பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்தில் வெற்றிமாறன் உங்களை சந்தித்தேன். நீங்கள் எனக்கு நல்ல நண்பனாக, துணைவனாக சகோதரனாக மாறுவீர்கள் என நினைக்கவில்லை. உங்களின் இயக்கத்தில் நான்கு படங்களில் நடித்துவிட்டேன். இரண்டு படங்கள் இணைந்து படம் தயாரித்தற்காகவும் பெருமைப்படுகிறேன். நாம் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கை அளவிட முடியாதது. அடுத்து எனக்காக என்ன கதை வைத்துள்ளீர்கள் என் ஆர்வத்தில் உங்களுக்காக காத்திருக்கிறேன்.

இந்த தருணத்தில் அசுரன் படத்தின் தயாரிப்பாளர் தாணு, படத்தில் நடித்த மஞ்சுவாரியார், கென் கருணாஸ், டீஜே, சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், வா அசுர வா... என்ற பாடலை தந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பத்திரிக்கை, ஊடகத்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக என் மீது அளவு கடந்த அன்பும், என்றும் எனக்கு துணையாக இருக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

அதோடு அறிக்கையின் கடைசி வார்த்தையாக எண்ணம்போல் வாழ்க்கை என்ற பன்ச் உடன் முடித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !