பிக்பாஸ் 5 ஒளிபரப்பு எப்போது தெரியுமா ?
தமிழ் டிவிக்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி என பிக் பாஸ் நிகழ்ச்சியைச் சொல்லலாம். நிகழ்ச்சித் தொகுப்பிற்கு கமல்ஹாசன், பிரம்மாண்டமான அரங்கம், பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், 100 நாள் தொடர் ஒளிபரப்பு என கடந்த நான்கு சீசன்களாக ரசிகர்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
இந்த வருடத்திற்கான ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருட நான்காவது சீசன் கொரானோ தொற்று பரவல் காரணமாக ஜுன் மாதத்தில் ஆரம்பமாக வேண்டியது அக்டோபர் மாதம் ஆரம்பமானது.
இந்த வருடமும் கொரானோ பாதிப்பு இருப்பதால் எப்போது ஆரம்பமாகும் என்பதில் இழுபறி நிலவி வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்றாவது அலை வரலாம் என்றும் சொல்லி வருகிறார்கள். அதற்கு முன்பாகவே நிகழ்ச்சியை ஆரம்பிக்க திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்தன.
தெலுங்கு பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சியை செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அது போலவே தமிழ் நிகழ்ச்சியும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
கமல்ஹாசன் அடுத்து 'விக்ரம்' படத்தில் நடிக்க ஆரம்பிக்க உள்ளார். ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, செப்டம்பர் மாதம் தான் சரியானதாக இருக்கும் என நிகழ்ச்சிக் குழுவும் கருதுகிறார்களாம்.
கமல்ஹாசன் படங்களும், டிவி நிகழ்ச்சிகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நிலையானதல்ல. எப்போது எப்படி மாறும் என்பது யாருக்கும் தெரியாது.