மோகன்.ஜியின் அடுத்த பரபரப்பு - ருத்ரதாண்டவம் டிரைலர் வெளியீடு
மோகன் ஜி இயக்கம், நடிகர் ரிச்சர்ட் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‛ருத்ர தாண்டவம்'. இவர்கள் கூட்டணியில் வெளியான திரெளபதி படம் நாடக காதல், திருமணம் குறித்து பேசியது. இதற்கு ஒருபுறம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி சர்ச்சையானது. இப்போது உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் படமும் சமூகத்தில் நிலவும் மற்றுமொரு முக்கிய பிரச்னையை குறித்து பேசப்போகிறது. இந்தப்படமும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மதமாற்றம், ஜாதி அரசியல் மற்றும் பிசிஆர்., சட்டங்கள் ஆகியவற்றை இந்தப்படம் பேச போகிறது என்பதை இன்று வெளியாகி உள்ள டிரைலரை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்துவராக மதம் மாறினால் பிசிஆர்., சட்டம் செல்லாது, என்னப்போய் சாதி வெறியனு ஊரெல்லாம் பேச வச்சுடீங்க... போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் நிச்சயம் இந்த படமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என டிரைலரில் வரும் காட்சிகளை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் டிரைலரில் கவுதம் மேனன் சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தை பேசி உள்ளார்.