உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ஆர்யா போல் நடித்து பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது

நடிகர் ஆர்யா போல் நடித்து பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது

சென்னை : நடிகர் ஆர்யா போல நடித்து, திருமண ஆசை காட்டி, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண்ணிடம் 70.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.


ஜெர்மன் குடியுரிமை பெற்று வசிப்பவர் வத்ஜா. இலங்கை பெண்ணான இவர், சில மாதத்திற்கு முன், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு, மின்னஞ்சலில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ஆர்யா என்னை திருமணம் செய்வதாகக் கூறி, 70.40 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டார். இது அவரது தாய்க்கும் தெரியும். இருவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


இந்த புகார், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த மோசடி குறித்து, நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் 1:30 மணி நேரத்திற்கு மேல் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.

விசாரணையில் சென்னை, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், 29, என்பவர், ஆர்யா போல நடித்து, வாட்ஸ் ஆப் வாயிலாக வத்ஜாவுக்கு காதல் வலை வீசியுள்ளார். பின், திருமணம் செய்வதாக 70.40 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததும், இதற்கு அவரது மைத்துனர் முகமது ஷூசைனி, 35, என்பவர் துணையாக இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த முகமது ஷூசைனி, முகமது அர்மான் ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !