சினிமாவில் களமிறங்கிய தாமிரபரணி பானுவின் மகள்
தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பானு. அதன் பிறகு தமிழில் சில படங்களில் நடித்தாலும், மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து திருமண வாழ்க்கையில் நுழைந்த தாமிரபரணி பானு, கியாரா என்கிற ஐந்து வயது பெண் குழந்தைக்கு தாயாக மாறி பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்டார்.
இந்த நிலையில் அம்மாவின் வழியை பின்பற்றி மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். மம்முட்டி நடித்த மாமாங்கம் என்கிற வரலாற்று படத்தை இயக்கிய எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவாகும் பத்தாம் வளவு என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் கியாரா. இந்த தகவலை பானுவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார். நடிகை மீனாவின் மகள் நைனிக்கா மற்றும் நடிகர் கொட்டச்சியின் மகள் மானஸ்வியை தொடர்ந்து பானுவின் மகளும் தன் நடிப்பால் ரசிகர்களை வசீகரிப்பார் என எதிர்பாக்கலாம்.