புது வெள்ளமாக பொன்னியின் செல்வன்
ADDED : 1504 days ago
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தபட அறிவிப்பு வெளியான சமயத்தில் ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யாவும் ‛பொன்னியின் செல்வன்' நாவலை அதேபெயரில் வெப்சீரிஸாக எடுக்கப்போவதாக அறிவித்தார். அதன்பிறகு இந்த வெப்சீரிஸ் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் ‛புது வெள்ளம்' என்ற பெயரில் பொன்னியின் செல்வன் முதல் சீசன் துவங்க உள்ளதாக சவுந்தர்யா அறிவித்து தனது குழு உடன் இருக்கும் போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். விரைவில் இதற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது.