உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / தண்டகாரண்யம்

தண்டகாரண்யம்

தயாரிப்பு : நீலம் புரடக் ஷன்ஸ்
இயக்கம் : அதியன் ஆதிரை
நடிப்பு : கலையரசன், அட்டக்கத்திதினேஷ், ரித்விகா, வின்சு, பாலசரவணன், ஷபீர்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : பிரதீப்கலைராஜா
வெளியான தேதி : செப்டம்பர் 19, 2025
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2.50 / 5

தண்டகாரண்யம் என்றால் தண்டனைக்குரிய காடு அல்லது தண்டனை பெற்றவர்கள் வசிக்கும் காடு என அர்த்தம். இப்போதைய ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் காட்டை தண்டகாரண்யம் என்று அழைக்கிறார்கள். ராமாயண வனவாசம் காலத்தில் ராமர், சீதை, லட்சுமணன் அங்கே வசித்ததாக கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் காட்டுப்பகுதியில் நக்சல்களை ஒழிக்க ராணுவம் நடத்தும் சிறப்பு முகாமில் ஏன் சேருகிறார் கலையரசன். அங்கே அவருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது. கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் வசிக்கும் அவரின் அண்ணன் அட்டக்கத்தி தினேஷ் சிலரால் பாதிக்கப்பட, பதிலுக்கு அவர் என்ன தண்டனை கொடுக்கிறார். காடு பின்னணியில் நடக்கும் மனித உரிமை பிரச்னைகள், அரசு, பழங்குடிஇன மக்கள் இடையேயான சிக்கல்களை சொல்லும் படம் தண்டகாரண்யம். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்துக்குபின் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் படம் இது.

கிருஷ்ணகிரி மாவட்ட காட்டுப்பகுதியில் வசிக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த கலையரசன், வன இலாகாவில் தற்காலிக ஊழியராக பணியாற்றுகிறார். அந்த வேலை நிரந்தரமானால், காதலி வின்சுவை திருமணம் செய்யலாம் என நினைக்கிறார். ஆனால், காட்டுப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்து சட்டவிரோத செயல்களை செய்யும் முத்துகுமாரை காட்டிக்கொடுக்க, இருக்கிற வேலையும் பறிபோகிறது. தம்பியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிலத்தை விற்று, அரசு நடத்தும் நக்சல் எதிர்ப்பு படையில் சேர அவரை ஜார்க்கண்ட் அனுப்புகிறார் அண்ணன் அட்டக்கத்தி தினேஷ். அண்ணன், அங்கே தம்பி வாழ்க்கை எப்படி மாறுகிறது. அண்ணன் என்னவாகிறார் என்பதை பழங்குடி மக்களின் நிலை, நக்சல் ஒழிப்பு, அரசு, அதிகார வர்க்கம் செயல்பாடுகள், அரசியல்வாதிகளின் சுயநல முகம் என விஷயங்களை கலந்து படத்தில் கொடுத்து இருக்கிறார்கள்.

வனத்துறை அதிகாரிகளால் ஏமாற்றப்படுவராக, நக்சல் ஒழிப்பு படையில் சேர்ந்து டார்ச்சர் அனுபவிப்பவராக வரும் கலையரசன் நடிப்பு ஓகே. குறிப்பாக, கேம்ப்பில் அவர் படும் பாடு, புலம்பல் ஆகியவை மனதில் நிற்கிறது. ஆனாலும், சில காட்சிகளில் இன்னும் உணர்ச்சிபூர்வமாக நடித்து இருக்கலாம். அவர் காதலியாக வரும் வின்சு மனதை கவர்கிறார்.

நக்சலாக மாறும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பு, வசனங்கள் அழுத்தமாக இருக்கிறது. அவர் அப்பா, மனைவி ரித்விகா, பழங்குடி மக்கள் கேரக்டர்கள், அவர்களின் வாழ்க்கை யதார்த்தமாக இருக்கிறது. ஆனாலும், வில்லன்கள் கேரக்டர், நடிப்பு பக்கா சினிமாத்தனம். அதேபோல், ஜார்க்கண்ட் முகாம் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் பல சீன்கள் வலிந்து திணிக்கப்பட்டு இருக்கிறது. ஏனோ வட இந்தியவர்கள், ராணுவ அதிகாரிகளை வில்லனாக காண்பிக்கிறார் இயக்குனர்.

கலையரசன் நண்பனாக வரும் டான்சிங் ஷபீர் கேரக்டர், அவர் நடிப்பு, அவர் சொல்லும் விஷயங்கள் கதையை வலுவாக்கிறது, பல இடங்களில் ஹீரோ கலையரசனை விட நடிப்பில் ஸ்கோர் செய்துவிடுகிறார். மற்றபடி, பல கேரக்டர்கள் செயற்கைதனமாக இருப்பதும், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் கெட்டவர்கள் போல காண்பித்து இருப்பதும் படத்தை வேறு திசைக்கு கொண்டு போய்விடுகிறது.

பிரதீப் கலைராஜா கேமரா காடு சம்பந்தப்பட்ட காட்சிகளை தத்ரூபமாக காண்பித்து இருக்கிறது. ஜஸ்டின் பிரபாரன் பின்னணி, பாடல்கள் படத்துக்கு பிளஸ்.

2028ம் ஆண்டில் நக்சல் எதிர்ப்பு படை என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, பல இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு , கடைசியில் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். பலியானவர்கள் அப்பாவிகள் என்ற கரு ஓகே. இது ஜார்க்கண்டில் நடந்த உண்மை சம்பவம் என்கிறார்கள். ஆனாலும், அரசியல் திணிப்பாக, ராணுவம், அரசு அமைப்புகளுக்கு எதிரான படமாக சொல்லியிருப்பதால் கதை தடுமாறுகிறது. ராணுவ பயிற்சியை ஏதோ சித்தரவதை போல் காண்பித்து இருப்பதும், ராணுவம் கூலி படையை உருவாக்குகிறது என்ற டோனும் சென்சாரை கடந்து எப்படி வந்ததோ? இப்படிப்பட்ட படங்கள் ராணுவத்தில் சேர துடிக்கும், தேச சிந்தனையுடன் இருக்கும் இளைஞர்களை வன்முறை பக்கம் மடைமாற்றம் செய்யாதா? கிளைமாக்சும் ராணுவ அதிகாரிகளை நக்சலான அட்டக்கத்தி தினேஷ் கொடூரமாக கொல்வதாக முடிகிறது.

படத்தின் பெரும்பகுதி நக்சல் ஒழிப்பு பயிற்சி, ராணுவ டிரில் என்று நகர்வது மைனஸ் ஆக இருக்கிறது. அங்கே நடக்கும் மொழி பிரச்னை, உயர் அதிகாரிகளின் டார்ச்சர், குருப்பிஸம் ஆகியவை வலிந்து திணிக்கப்பட்டதாக இருப்பது போராடிக்கிறது. பல சீன்கள் டாணக்காரன், விடுதலை படத்தை நினைவுப்படுத்துகின்றன. படம் முழுக்க சிவபு்பு சிந்தனை, நக்சல் ஆதரவு மனப்பான்மை, தேசத்துக்கு எதிரான சிந்தனை என்று நகர்வதும் படம் எடுத்தவர்கள், இயக்குனரின் உள்நோக்கத்தை நன்றாக தெரிய வைக்கிறது.

தண்டகாரண்யம் - ராணுவத்தில் சேராதீங்க, நக்சல் ஆகுங்க என்ற ஆபத்தான சிந்தனை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)