உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / சக்தித் திருமகன்

சக்தித் திருமகன்

தயாரிப்பு: விஜய் ஆண்டனி கார்ப்பரேசன்
இயக்கம்: அருண்பிரபு புருஷோத்தமன்
நடிப்பு: விஜய்ஆண்டனி, திரிப்தி ரவீந்திரா, செல்முருகன், வாகை சந்திரசேகர் மற்றும் காதல்ஓவியம் சுனில்
இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : ஷெல்லி
வெளியான தேதி: செப்டம்பர் 19, 2025
நேரம்: 2 மணிநேரம் 37 நிமிடங்கள்
ரேட்டிங்: 2.5 / 5

சென்னை தலைமை செயலகத்தில் புரோக்கர் வேலை பார்க்கிறார் விஜய் ஆண்டனி. சாதாரண புரோக்கர் அல்ல,
சி.எம் பெயரை சொல்லி, மந்திரிகளிடம் பிஸினஸ் டீலிங் பேசுகிறார், உயர் அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொடுக்கிறார், பெரிய திட்டங்களில் பெர்மிஷன் வாங்கிக்கொடுக்கிறார். கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறார். மந்திரி பதவியை பறிக்கும் அளவுக்கு பவர்புல் மனிதராக வலம் வந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

தமிழகத்தின் பெரும்புள்ளியான, டில்லி அரசியல் புரோக்கரான 'காதல் ஓவியம்' சுனிலுக்கு, விஜய் ஆண்டனி மீது சந்தேகம் வர, டில்லியில் இருந்து ஒரு ஆபீசரை வரவழைத்து விசாரிக்கிறார். 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை விஜய் ஆண்டனி இப்படி சுருட்டியிருப்பதும், தனது குடும்ப விஷயத்தில் தலையிட்டு இருப்பதும் அவருக்கு தெரிய வருகிறது. விஜய் ஆண்டனி என்ன செய்கிறார்? ஜனாதிபதி ஆக நினைக்கும் வில்லன் சுனிலின் ஆசைக்கு தடைபோட நினைக்கும் விஜய்ஆண்டனியின் திட்டம் நிறைவேறியதா? சுனிலுக்கும், விஜய் ஆண்டனிக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் சக்தித்திருமகன் கதை. 'அருவி, வாழ்' படத்துக்குபின் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கிறார்.

சுருக்கமாக சொன்னால் இரண்டு புரோக்கர்களுக்கு இடையேயான ஈகோ மோதல்தான் கதை. விஜய் ஆண்டனி 'இருப்பவர்களிடம்' பணத்தை அடித்து, கொஞ்சம் நல்லது செய்கிறார். தனது பவரை வைத்து இந்தியாவின் தலையெழுத்தையே மாற்ற நினைக்கிறார் வில்லன் சுனில். இருவரில் யார் ஜெயித்தார்கள் என்ற அதிகாரப்போட்டியை பணம், அரசியல், சூழ்ச்சி, அரசு அமைப்புகள், பிட் காயின், அதிகாரபலம் என பல விஷயங்களை கலந்து விறுவிறு திரைக்கதையாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

கிட்டு என்ற கேரக்டரில் புரோக்கராக வரும் விஜய் ஆண்டனியின் கேரக்டர், அவர் செயல்கள் ஆச்சரியப்படுத்துகிறது. அவரும் அதை உணர்ந்து சுறுசுறுப்பாக நடித்து இருக்கிறார். முதற்பாதி அவர் நடத்தும் ஆபரேசன், வேலைகள் கச்சிதம். ஆனால், இடைவேளைக்குபின் அந்த நடிப்பில் தொய்வு. என்ன, காரியத்தை சாதிக்க, பெண்களை கூட கூட்டிக்கொடுக்கும் மாமா வேலை பார்க்கிறார். இது குறித்து பல இடங்களில் வெளிப்படையான வசனங்கள் வேறு.

தமிழில் எந்த ஹீரோவும் இப்படிப்பட்ட கேரக்டரில், இப்படிப்பட்ட வசனங்களில் நடிக்கமாட்டார்கள். அரசியல் கதை என்பதால் பெரிதாக ஆக்சன் காட்சிகள் இல்லை. காதல், சென்டிமென்ட் காட்சிகளில் விஜய் ஆண்டனி பாஸ் ஆகவில்லை. கிளைமாக்சில் ஏதோ பெரிதாக செய்யப்போகிறார், அதிரடி சண்டைக்காட்சி இருக்கிறது என நினைத்தால் அதுவும் 'சப்'.

'காதல் ஓவியம்' படத்தில் கண்ணனாக நடித்து, பலரையும் கவர்ந்த சுனில் இதில் பவர்புல் கேரக்டரில் மிரட்டலாக நடித்து இருக்கிறார். அவரின் பேச்சு, நடை, உடை, எண்ணங்கள் வேறு ரகம். வலதுசாரி சிந்தனை கொண்டவராக, ஒரு குறிப்பிட்ட பின்னணி கொண்டவராக அவரை காண்பித்து இருக்கிறார் இயக்குனர். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் பவர்புல் மனிதராக, டில்லி அரசியலில் செல்வாக்கு படைத்தவராக இருக்கும் 'குரு'வானவரை அவர் கேரக்டர் நினைவுப்படுத்துகிறது. அவருக்கு உதவும் டில்லி பெண் மந்திரி கேரக்டர், அவர் பேசும் தமிழ், அந்த பவர்புல் மத்திய அமைச்சரை நினைவுப்படுத்துகிறது.

ஹீரோயின் திரிப்தி ரவீந்திரா ஹோம்லியாக வருகிறார். ஆனால், படத்தில் அவருக்கான காட்சிகள் அவ்வளவாக இல்லை. படத்தில் பல கேரக்டர்கள், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாக, அதுவும் தவறானவர்களாக, பணத்தாசை கொண்டவர்களாக காண்பிக்கப்படுகிறார்கள். அதற்கு காரணம், பகுத்தறிவு பேசும் தாத்தா சந்திரசேகரிடம் வளர்கிறார் விஜய்ஆண்டனி. இப்படி ஒரு சமூகத்தை வலிந்து தவறாக காண்பிக்க விஜய்ஆண்டனி, இயக்குனர் அருண்பிரபுவுக்கு என்ன அஜெண்டாவோ?

விவேக் படங்களில் அவருடன் இணைந்து காமெடி செய்த செல்முருகனுக்கு இதில் குணசித்திர கே ரக்டர். ஹீரோயின் ஹோம்லியாக இருக்கிறார். அவர் இடைவேளைக்குபின் மாறப்போகிறார். அவர் கேரக்டர் வெடிக்கப்போகிறது என்று நினைத்தால் அதிலும் ஏமாற்றம். இவர்களை தவிர, ஸ்பெஷல் ஆபீசராக வருபவர், போலீஸ் அதிகாரிகள், மந்திரிகள், கம்யூட்டரை ஹேக் செய்பவர்கள் என பலர் இருக்கிறார்கள். அவர்கள் பல படங்களில் பார்த்தவர்கள் மாதிரி இருக்கிறார்கள். தமிழக அறநிலையத்துறை மந்திரி, முதல்வர் வீட்டு கிச்சன் கேபினட்டை கூட ஒரு இடத்தில் கிண்டல அடித்து இருக்கிறார்கள். அதை ரசிக்க முடிகிறது.

கோடிக்கணக்கான பணத்தை திட்டமிட்டு சுருட்டும் விஜய் ஆண்டனி அதை நல்லது செய்வதாக காண்பிக்கிறார்கள். அதில் தெளிவு இல்லை, ஒரு தனிப்பட்ட மனிதரை பிடிக்க, இவ்வளவு பெரிய அரசு டீம் வேலை செய்யுமா? என்று யோசித்தால் லாஜிக் பிரச்னை. முதற்பாதியில் ஓரளவு வேகமாக நகரும் கதை, அடுத்த பாதியில் வேறு திசைக்கு நகர்ந்து தள்ளாடுகிறது. வெளிநாடு, பிட் காயின் சம்பந்தப்பட்ட சீன்கள் குழப்பம். கிளைமாக்ஸ் வலுவாக இல்லை.

படத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஹீரோ பேசுகிறார். வில்லன், ஆபிசர், மற்றவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எடிட்டர் துாங்கிவிட்டாரா? சமீபத்திய படங்களில் அதிக டயலாக் கொண்ட படம் இதுதான். பல சீன்களை முழுமையாக புரிவதற்குள் அடுத்த சீன் வருகிறது. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கடைசியில் பக்கம், பக்கமாக வசனமாக பேசுகிறார் ஹீரோ. நாடு, மக்கள், பணம், ஊழல், ஏற்றத்தாழ்வு, வருமானம், வறுமை என பேச, பேச 'எப்ப படம் முடியும்' என்று நினைக்க வேண்டியது இருக்கிறது.

அருவி இயக்குனர் படமாச்சே என்று சென்றால், ஆரம்பம் முதல் கடைசிவரை அவர் மனதில் நினைத்ததை, தனது எண்ணத்தை சீன்களாக மாற்றி, தத்துவம், பகுத்தறிவு, கேள்விகள், அட்வைஸ் என குழப்பி இருக்கிறார். சினிமாவுக்கான திரைக்கதை, டுவிஸ்ட், காமெடி, பாடல், கலர்புல் விஷயங்கள் என கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் இல்லை.

சக்தித்திருமகன் - திருதிருவென தலைசுற்ற வைக்கும், 'சக்தி' இல்லாத மகன்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)