பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இன்று குருப்பெயர்ச்சி விழா, நடக்கிறது. குருபகவான், இன்று மாலை 6.25 மணிக்கு, மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார். இதையடுத்து, குருப்பெயர்ச்சி விழா இன்று மாலை, பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் கணபதி பூஜையுடன் துவங்குகிறது. நவக்கிரகத்திலுள்ள குருபகவானுக்கு குருஹோமமும், தட்சிணாமூர்த்திக்கு சிவபஞ்சாட்சண ஹோமமும் நடைபெறும். கலசங்கள் வைத்து பூஜித்து நவக்கிரகத்தில் குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அபிஷேகம் செய்யப்படும். விசேஷ அலங்கார தீபாராதனை நடக்கிறது. குருப்பெயர்ச்சியால், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசியை சேர்ந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லதென கோவில் குருக்கள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை, கோவில் சர்தவசாதகம் சிவசண்முகசுந்தர குருக்கள், குருத்துவம் நாகராஜ குருக்கள் தலைமையிலான குருக்கள் செய்துள்ளனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம், 80 அடி ரோட்டில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவிலில், தேவிகளுடன் வீற்றிருக்கும் நவக்கிரகங்களுக்கு, இன்று காலை 8.00 முதல் இரவு 8.00 மணி வரை, சிறப்புப் பூஜை நடை பெறுகிறது. தமிழ் வேள்வியுடன், திருமஞ்சனமும் அன்னம் பாலிப்பும் நடைபெறுகிறது. இத்தகவலை, கோவில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
உண்டியல் வசூல் ரூ.17 லட்சம்: பட்டீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில், 17 லட்சத்து 32 ஆயிரத்து 894 ரூபாய் வசூலாகியிருந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக, 151 கிராம் தங்கமும், 722 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனர். பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டத்துக்கு பிறகு, இரண்டரை மாதம் கழித்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவிலில் உள்ள கொடிமர உண்டியல், நந்தி உண்டியல், வெள்ளக்கோபுர உண்டியல், சாமி சன்னதி உண்டியல், பட்டிவிநாயகர் கோவில் உண்டியல் உள்பட மொத்தம் 19 உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஆறுமுகம் முன்னிலையில், பேரூர் தமிழ்கல்லூரியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர், மகளிர் குழுவினர், கோவில் ஊழியர்கள் உள்பட 75க்கும் மேற்பட்டோர், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 17 லட்சத்து 32 ஆயிரத்து 894 ரூபாய் பணம் வசூலாகியிருந்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக செலுத்திய 151 கிராம் தங்கமும், 722 கிராம் வெள்ளியும் உண்டியல் எண்ணும்போது இருந்தது. தங்கம், வெள்ளியை நேர்த்திக்கடனாக செலுத்தினர். பக்தர்கள்வெளிநாட்டு டாலர் பணமும், நூற்றுக்கணக்கான திருமண ஜாதக பேப்பர்களும் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியின் போது,பேரூர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கோவில் திருப்பணி ஊழியர்கள் உடனிருந்தனர்.