கண்ணுக்கு கண்ணானவர்கள்
ADDED :4900 days ago
கண் என்றால், அதில் கருணை இருக்கவேண்டும். கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம் என்பர். இதை வெளிப்படுத்தும்விதத்தில் பல தலங்களில் அம்பிகையின் பெயர் கண்ணோடு சேர்த்து வழங்கப்படுகிறது. தேவிதலங்களில் மதுரை, காஞ்சிபுரம், காசி மூன்றையும் சேர்த்துச் சொல்லும் மரபு உண்டு. இம்மூன்றிலும் அம்பிகையின் திருநாமத்தில் கண் இடம் பெற்றுள்ளது. மதுரையில் அம்பிகை மீனாட்சியாக இருக்கிறாள். இவள் மீன் போன்ற கண்களைக் கொண்டவள். மீன் தன் குஞ்சுகளைக் கண்ணால் காப்பது போல, இவள் தன் கயல்விழிகளால் உயிர்களைக் காக்கிறாள். அடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் கண்களைக் கொண்டவளாக இருப்பதால் காஞ்சியில் காமாட்சி என்று பெயர் பெறுகிறாள். காசியில் விசாலமான அகன்ற கண்களைக் கொண்டு விசாலாட்சியாக அருள்பாலிக்கிறாள்.