உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவிற்கான பந்தகால் முகூர்த்தம்!

காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவிற்கான பந்தகால் முகூர்த்தம்!

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவிற்கான பந்தகால் முகூர்த்தம் நேற்று நடந்தது. காரைக்கால் பாரதியார் வீதியில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனி திருவிழா பிரசித்தி பெற்றது. பழங்காலத்தில் காரைக்காலில் வாழ்ந்த தனதத்தருக்கு மகளாக பிறந்து புனிதவதியார் இயற்பெயருடன் வாழ்ந்த காரைக்கால் அம்மையார், பரமதத்தரை மணந்து வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் பரமதத்தர் வழங்கிய இரண்டு மாங்கனி ஒன்றை அடியார் வேடத்தில் வீட்டிற்கு வந்த சிவபெருமானுக்கு உணவுடன் சேர்ந்து வழங்கினார். பின், வீடு திரும்பிய கணவர் பரமதத்தருக்கு மீதமிருந்து மாங்கனி ஒன்றை உணவுடன் வழங்க, பழத்தின் ருசி அதிகமாக இருப்பதால் மேலும் ஒரு பழத்தை கேட்டார் பரமதத்தர். செய்வதறியாது திகைத்த காரைக்கால் அம்மையார் வீட்டின் சமையல் அறைக்கு சென்று ஈசனிடம் வேண்டி உருகினார். அவரது கையில் மாங்கனி கிடைத்தது. உடனே தனது கணவர் பரமதத்தருக்கு மாங்கனியை உணவுடன் படைத்தார்.

முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இப்பழம் அதிக சுவை கொண்டதாக இருப்பதிற்கான காரணத்தை விழைந்தார் பரமதத்தர். நடந்ததை அம்மையார் கூற, அதை ஏற்க மறுத்த பரமதத்தர் மீண்டும் ஒரு மாங்கனி பெற்று தருவாய் என்று கேட்டார். அப்போது, கணவன் முன் ஈசனிடம் வேண்டி மீண்டும் ஒரு மாங்கனியை பெற்று தந்தார். இந்த காட்சியை கண்ட பரமதத்தர் அம்மையார் மனிதப்பிறவி கிடையாது, தெய்வ பிறவி என்று கூறி பிரிந்து மதுரை சென்று இரண்டாவது திருமணம் செய்து, தனது குழந்தைக்கு புனிதவதியார் என பெயர் சூட்டி வாழ்ந்து வந்தார். கணவரை காண மதுரை சென்ற காரைக்கால் அம்மையாரை பரமதத்தர் தனது இரண்டவாது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்து வணங்கினார். அப்போது, கணவருக்காக ஏற்ற உடலை உருக்கி தனக்கு பேய் உருவம் வேண்டி ஈசனிடம் பெற்றார். அதன்பின் சிவபெருமானை காண கயிலாயம் சென்றார். அப்போது, புனிதமான கயிலாயத்தில் தன் கால்பாதம் படகூடாது என்பதால், தலைகீழாக கைகலால் நடந்து சென்றார். தலைகீழாக நடந்து வந்த அம்மையாரை பார்த்த தாய் தந்தை அற்ற சிவபெருமான் அம்மா என்று அழைத்தார் என்பது வரலாறு. இந்த வரலாற்று நிகழ்வை பிரதிபலிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடக்கிறது. இவ்வாண்டு திருவிழா வரும் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. 3ம் தேதி மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான பந்தகால் முகூர்த்தம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !