தீபாஞ்சியம்மன் கோவில் திருவிழா
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த சிவாடியில் 18 கிராம மக்கள் சார்பில் ஸ்ரீதீபாஞ்சியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவில், மே, 26ம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றமும், கும்பாபிஷேகமும் நடந்தது. பூக்கூடை எடுத்தல் மற்றும் சக்தி அழைத்தல், எண்ணெய் காப்பிடுதல், கற்பூர ஆராதனை நடந்தது. 27ம் தேதி அம்மன் சன்னதியில் விசேஷ பூஜை நடந்தது. மாலை மாதேமங்கலம், தின்ன அள்ளி, சின்னரெட்டி அள்ளி, லளிகம் மற்றும் இண்டூர் ஊர்களில் தேர் உற்சவம் மாவிளக்குடன் அதியமான் கோட்டைக்கு வந்தடைந்தது. அன்று இரவு நல்லம்பள்ளிக்கு தேர் வந்தது. சேசம்பட்டி, குடிப்பட்டி, மலையப்பநகர், ஆர்.சி.செட்டிப்பட்டி மற்றும் தீவட்டிப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து புறப்பட்ட தேர் உற்சவம் நல்லம்பள்ளிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து தேர் உற்சவம் மாவிளக்கு ஊர்வலம் கொண்டகரஅள்ளி, தாட்றாவூர், வே.முத்தம்பட்டி, வேப்பமரத்தூர், பாகல்பட்டி மற்றும் ஏலகிரி ஆகிய ஊர்களின் தேர்களும் இணைந்து, கந்துகால்பட்டியில் உள்ள கரக வீட்டை வந்தடைந்தன. கடந்த, 28ம் தேதி அதிகாலை கரகம் அழைத்தலும், குண்டம் இறங்குதலும், அம்மன் அருள் பெற்று அனைத்து ஊர்களும் மாவிளக்குடன் அம்மன் சன்னதியை அடைந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டு நடந்தது. ஏற்பாடுகளை 18 கிராம தலைவர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.