உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்புபாச்சி மேளாவிற்கு பின் காமாக்யா கோவில் திறப்பு!

அம்புபாச்சி மேளாவிற்கு பின் காமாக்யா கோவில் திறப்பு!

அசாமில் உள்ள பிரசித்தி பெற்ற காமாக்யா கோவில், நான்கு நாள் அம்புபாச்சி மேளாவுக்கு பின், மீண்டும் திறக்கப்பட்டது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். அசாமில் கவுகாத்தி அருகில் உள்ள, காமகிரி மலையின் உச்சியில் பிரசித்தி பெற்ற காமாக்யா அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்மன், சக்தி, துர்கா என, பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இங்கு நடக்கும், "அம்புபாச்சி மேளா என்ற நான்கு நாள் திருவிழா, மிகவும் பிரசித்தம். இந்த நான்கு நாட்களும், காமாக்யா தேவியின் மாதவிடாய் காலம் என கருதி, கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். இந்த நான்கு நாட்களும், கோவிலில் பல்வேறு சடங்குகள் மற்றும் பூஜைகள் நடக்கும். இதில் பங்கேற்பதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், ஏராளமான சாதுக்கள் வருவர். ஆண்டு முழுவதும், அடர்ந்த குகைகளிலும், மலைகளிலும் தவம் இருக்கும் சாதுக்கள் சிலர், இந்த மேளாவில் கலந்து கொள்வதற்காக மட்டுமே, நான்கு நாட்களுக்கு வெளியில் வருவதாகவும் கூறப்படுவது உண்டு. இந்த அம்புபாச்சி மேளா, கடந்த வாரம் துவங்கியது. நாடு முழுவதும் இருந்து, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான சாதுக்கள், யோகிகள், பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில், நான்கு நாள் மேளா முடிந்து, நேற்று முன்தினம் அதிகாலை கோவில் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டன. அப்போது சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனை தரிசிப்பதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !