ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச கழிப்பறை வசதி இல்லாததால், பெரிதும் அவதிபடுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதில் வாகனத்தில் வரும் பக்தர்கள் கோயில் கார் பார்க், தனியார் பார்க்கில் வாகனங்களை நிறுத்தி அங்குள்ள கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசு பஸ், ரயிலில் வந்திறங்கும் பக்தர்கள் கோயிலில் நீராடி தரிசிப்பதற்கு முன்பும், பின்பும் இயற்கை உபாதை செல்ல கோயில் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை, ரயில்வே ஸ்டேஷன் அருகில் இலவச கழிப்பறை கூடம் இன்றி அவதிபடுகின்றனர். இதனால் பலரும் திறந்த வெளியில் இயற்கை உபாதை செல்வதால், பாதுகாப்பற்ற சூழல் எழுகிறது.
ரயில்வே ஸ்டேஷன் அருகில் கோயிலுக்கு சொந்தமான தங்கும் வசதியுடன் கழிப்பறை, அக்னி தீர்த்த கடற்கரையில் நகராட்சியின் கழிப்பறை கூடம் இருந்தும் பயன்பாடின்றி முடங்கி கிடக்கிறது. ராமேஸ்வரம் கோயிலில் ஓராண்டில் ரூபாய்.10 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்ததும், கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கூட ஏற்படுத்தாதது கண்டனத்துக்குரியது என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.