திண்டிவனம் கோவில்களில் பிரதோஷ விழா: பக்தர்கள் சிறப்பு வழிபாடு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சரகத்திற்கு உட்பட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த ஆண்டின் இறுதி பிரதோஷ விழா நேற்று மாலை நடந்தது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தும், பிரசித்தி பெற்ற சிவன் கோயில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் இந்த ஆண்டின் இறுதிப் பிரதோஷ விழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது இதில், இரும்பையில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளம் என்று அழைக்கப்படும் மாஹகாளேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நடந்த பிரதோஷ விழாவில், மூலவர் மாஹகாளேஸ்வரர் மற்றும் அவர் எதிரில் வீற்றிருக்கும் நந்தி பகவானுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், உள்ளிட்ட 11 அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அம்பாள் மது சுந்தர நாயகி உடன் சமேதராக எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விளக்கேற்றி வழிபட்டனர்.