உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று சிவராத்திரி: குமரியில் சிவாலய ஓட்டம் தொடக்கம்

இன்று சிவராத்திரி: குமரியில் சிவாலய ஓட்டம் தொடக்கம்

நாகர்கோவில்: இன்று சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. விடிய விடிய ஓடி பக்தர்கள் 12 சிவாலயங்களை வழிபடுகின்றனர். சிவராத்திரியில் இரவு முழுவதும் துாங்காமல் இருந்து சிவனை வழிபடுவது நாடு முழுவதும் உள்ள வழக்கம். ஆனால் குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்காடு தாலுகாவில் உள்ள 12 சிவன் கோயில்களில் ஓடி சென்று வழிபடுகின்றனர்.

திருமலை மகாதேவர் கோயிலில் தொடங்கி திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர் ,திருநந்திக்கரை சிவன், பொன்மனை தீம்புலாங்கடி மகாதேவர், பன்னிப்பாகம் சிவன்,கல்குளம் நீலகண்ட சுவாமி, மேலாங்கோடு சிவன், திருவிடைக்கோடு மகாதேவர், திருவிதாங்கோடு சிவன், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில்களில் வணங்கி விட்டு திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் வந்து ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். சைவ வைணவ ஒற்றுமையை குறிக்கும் வகையில் இந்த ஐதீகம் உள்ளது ஒருமுறை பகவான் கிருஷ்ணன் ராஜகுரு யாகத்திற்காக புருஷா மிருகத்தின் பால் கொண்டுவர பஞ்சபாண்டவர்களில் ஒருவராகிய பீமனிடம் வேண்டினார். பீமனும் பகவானின் கோரிக்கையை ஏற்றார். 12 ருத்ராட்சங்களை பீமனிடம் கொடுத்து புருஷாமிருகம் சிறந்த சிவபக்தி உடையது அது திருமாலின் நாமத்தை கேட்டால் சினம் கொள்ளும் அந்த மிருகத்தால் ஆபத்து வரும் தருவாயில் ஒரு ருத்ராட்சத்தை போட்டு விட்டு ஓடவும் என்று கூறி பகவான் கிருஷ்ணன் பீமனை வழியனுப்பி வைத்தார்.. திருமலையினஅடர்ந்த காட்டுப்பகுதியில் தவம் மேற்கொண்டிருந்த புருஷாமிருகம் தவம் இருப்பதை காண்கிறார் சிவனை நோக்கி கடும் தவம் இருக்கும் புருஷாமிருகத்துடன் கோவிந்தா கோபாலா என்று திருமாலின் நாமத்தை பீமன் கூற புருஷாமிருகம் கோபாலா கோவிந்தா கோஷத்தை கேட்டு பீமனைத் விரட்டுகிறது அப்போது பகவான் கிருஷ்ணன் கூறியதைப் போன்று பீமன் ருத்திராட்சத்தை தரையில் போட்டுவிட்டு ஓடுகிறார் அப்போது அந்த ருத்ராட்சம் சிவலிங்கமாக உருமாறுகிறது உடனே புருஷாமிருகம் சிவலிங்கத்தை வணங்கிய பின்னர் பீமனை விரட்டுகிறது.

இதுபோன்று 11 ருத்ராட்சங்களை தரையில் போட்டுவிட்டு நிறைவாக நட்டாலம் பகுதியில் ருத்ராட்சம் போடப்படுகிறது அங்கு சிவலிங்கம் தோன்றியது அவ்விடத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒன்றாக தோன்றி ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை உலகுக்கு உணர்த்தினர். நட்டாலம் ஆலயத்தில் மூலவர் சங்கரநாராயணராக காட்சி தருகிறார் இங்கு ஒரே விக்ரகத்தில் ஒரு பாதியில் சிவன் உடுக்கையுடனும், மறுபாதியில் விஷ்ணு சக்கராயுதத்துடன் காட்சி தருகிறார். இந்த வரலாறை உணர்த்தும் வகையில் திருமலையில் இருந்து பக்தர்கள் கோபால, கோவிந்தா என்ற கோஷத்துடன் நேற்று மதியம் முதல் ஓட தொடங்கினர். இன்று மதியத்துக்கு பின்னர் திருநட்டாலத்தில் ஓட்டம் நிறைவு பெற தொடங்கும். வாகனங்களில் செல்பவர்கள் இன்று காலை முதல் தங்கள் பயணத்தை தொடங்குவர். இதற்காக குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !